நெல்லை பகுதியில் ஆங்கில வழி கல்விக்கு அரசு பள்ளிகள் தயார்

நெல்லை, : அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்து இந்த கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகள் மற்றும் மாநகராட்சி தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு 1ஆம் வகுப்பிற்கு ஆங்கில வழிக்கல்வி வகுப்புகள் தொடங்கப்படும். ஒரு வகுப்பிற்கு குறைந் தது 20 மாணவர்களை சேர்க்க வேண்டும் என தொடக்க கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. 
இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் அரசு தொடக்க பள்ளிகள் மற்றும் மாநகராட்சி தொடக்க பள்ளிகளில் ஆங்கில பிரிவு வகுப்புகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டு உள்ளன. மேலும் மாணவர்கள் சேர்க்கைக்கும் ஆயத்தமாக உள்ளனர். தங்கள் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் ஆங்கில வழி கல்வி தொடங்க உள்ளது குறித்த அறிவிப்பையும் பள்ளி முன்பு வைத்துள்ளனர். இதனால் ஏராளமான ஏழை மற்றும் நடுத்தர பிரிவு பெற்றோர் தங்கள் குழந்தைகளை 1ஆம் வகுப்பு ஆங்கில பிரிவில் சேர்ப்பதற்கு விசாரித்து சென்ற வண்ணம் உள்ளனர்.
பள்ளி திறக்கும் நாள் முதல் ஆங்கில வழி கல்விக்கான புதிய மாணவர்களை சேர்க்கவும் அவர்களுக்கு தேவையான பாடபுத்தகங்கள் மற்றும் நோட்டுகள் எழுதுபொருள் உள்ளிட்ட இலவச கல்வி பொருட்களை வழங்கவும் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மாணவர்கள் அதிக அளவில் சேராத பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து தொடக்க கல்வித்துறை வட்டாரத்தினர் கூறுகையில், “ஆங்கில வழி கல்வி கற்க அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு 1ஆம் வகுப்பு சேரும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான பாடபுத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த மாணவர்களை ஊக்குவிக்கவும் நன்றாக கற்றுக் கொடுக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே எதிர்பார்த்ததை விட அதிக அளவில் மாணவர்கள் ஆங்கில வழிக் கல்வியில் சேர்வார்கள் என எதிர்பார்க்கிறோம். அதே நேரத்தில் தமிழ் வழி கல்வியும் தொடர்ந்து தனி வகுப்பாக கற்றுத்தரப்படும்“ என்றனர்.

No comments:

Post a Comment