விமான நிலைய விரிவாக்கத்திற்காக ரிங்ரோட்டில் 3 கிமீ தூரம் துண்டிக்க திட்டம்

மதுரை, : விமான நிலைய விரிவாக்கத்திற்காக ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ள இடத்தை விரைவாக ஒப்படைக்கும்படி விமான ஆணையம் கேட்டுள்ளது. இதற்காக மதுரை ரிங்ரோட்டை 3 கிமீ தூரம் துண்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
மதுரை விமான நிலையம் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படுகிறது. இதன்படி தற்போதுள்ள விமான ஓடு தள நீளம் 7 ஆயிரத்து 500 அடியில் இருந்து, 12 ஆயிரத்து 500 அடியாக நீட்டிக்க திட்டம் தயாராகி உள்ளது. இதற்காக 610 ஏக்கர் நிலத்தை ஆர்ஜிதம் செய்து ஒப்படைக்கும்படி தமிழக அரசிடம் விமான ஆணையம் கோரியுள்ளது.
நில ஆர்ஜிதமானது பெருங்குடி, சின்ன உடைப்பு, பாப்பான்ஓடை, ராமன்குளம் போன்ற பகுதிகளில் முடிவடையும் நிலையில் உள்ளது. அந்த இடங்களுக்கு அரசு நிர்ணய விலையில் இருந்து அதன் உரிமையாளர்கள் கூடுதலாக விலை கேட்டு வருகின்றனர். இதில் விரைவில் முடிவு ஏற்பட்டு, ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலங்கள் விரைவில் விமான ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன.  
இந்த நிலங்களுக்கும், விமான நிலைய வளாக எல்லைக்கும் நடுவில் மதுரை ரிங்ரோடு அமைந்துள்ளது. உத்தங்குடி, கப்பலூர் இடையிலான 27 கி.மீ. தூர ரிங்ரோட்டில், விமான நிலைய விரிவாக்கத்திற்காக மண்டேலா நகரில் இருந்து 3 கி.மீ. தூரம் துண்டிக்க வேண்டியுள்ளது. இதற்காக ரிங்ரோட்டை மாற்றுப் பாதையில் திருப்பி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
இதன்படி மதுரையில் இருந்து செல்லும் போது, மண்டேலா நகர் அருகில் வலது பக்கம் திரும்பி சரஸ்வதி நாராயணன் கல்லூரி வழியாக சுற்றி, மீண்டும் ரிங்ரோட்டில் இணையும் வகையில் ஆறரை கி.மீ. தூரம் நான்கு வழிச்சாலை அமைக்க 2 ஆண்டுக்கு முன் மாவட்ட நிர்வாகம் ஆய்வு நடத்தி முடித்தது. இதன்படி ரிங்ரோட்டை மாநகராட்சி சார்பில் நான்குவழிச்சாலையாக்க ரூ.121 கோடி மதிப்பீட்டில் திட்டம் உருவாக்கப்பட்டது. அந்த திட்டம் அப்படியே உள்ளது. 
இந்நிலையில் புதிய மாற்றுப் பாதையை உருவாக்கி சாலை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதன்படி மதுரையில் இருந்து செல்லும் ரிங்ரோட்டில் மண்டேலா நகரில் இருந்து, இடது பக்கம் திரும்பி, சின்னஉடைப்பு கண்மாய் பகுதி வழியாக, அருப்புக்கோட்டை சாலையில் இணைக்க திட்டமிடப்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்யப்படுகிறது. 
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “ரிங்ரோட்டில் துண்டிக்கப்படும் 3 கி.மீ. தூரத்திற்கு மாற்று பாதை குறித்து ஏற்கனவே ஆய்வு நடத்தி முடிக்கப்பட்ட பாதையில் சாலை அமைத்தால், அருப்புக்கோட்டை, தூத்துக்குடி செல்லும் வாகனங்களின் பயண தூரம் 6 கிமீ அதிகரிக்கும். 
எனவே அந்த பாதை மாற்றம் செய்யப்பட்டு, சின்னஉடைப்பு கண்மாயை தாண்டியுள்ள இடம் வழியாக புதிய மாற்று சாலை அமைத்து, அருப்புக்கோட்டை சாலையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி ரிங்ரோட்டை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய திட்டம் தயாரிக்கப்படுகிறதுÕ என்றார். ஆனால், இன்னும் எந்த பாதையில் சாலை அமைப்பது என இறுதி செய்யப்படவில்லை. 
ரிங்ரோட்டில் 3 கி.மீ. தூரம் துண்டிக்கும் முன்பே அதற்கு மாற்றுச் பாதையில் சாலை அமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மாற்று சாலை அமைத்த பிறகே ரிங்ரோட்டின் ஒரு பகுதியை மாநகராட்சி ஒப்படைக்க முடியும். எனவே அதற்கான பணிகளை விரைவாக மேற்கொள்ளும்படி மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

                                                                                  Thankyou      dinakaran

No comments:

Post a Comment