சல்மான் ருஷ்டியின் தலைக்கு ரூ.18.15 கோடி சன்மானம்: ஈரான் மதவாத அமைப்பு அறிவிப்பு

மாஸ்கோ: சர்ச்சைக்குரிய சாத்தானின் வேதங்கள் என்ற நாவலை எழுதிய சல்மான் ருஷ்டி தலைக்கு அறிவித்திருந்த பரிசுத் தொகை ரூ.18 கோடியே 15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் பிறந்து இங்கிலாந்து குடியுரிமை பெற்று வாழும் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. அவர் எழுதிய சாத்தானின் வேதங்கள் நாவல் இஸ்லாத்திற்கு எதிரானது என்று கூறிய ஈரான் மதவாத தலைவர் அயத்துல்லா கோமேனி சல்மான் ருஷ்டிக்கு பத்வா கொடுத்ததுடன் அவரைக் கொலை செய்பவர்களுக்கு ரூ.5 கோடியே 50 லட்சம் பரிசுத் தொகை அளிக்கப்படும் என்று அறிவித்தார்.
அந்த தொகை படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது ரூ.18 கோடியே 15 லட்சமாகியுள்ளது. சல்மான் ருஷ்டியைக் கொலை செய்பவருக்கு ரூ.18 கோடியே 15 லட்சம் வழங்கப்படும் என்று ஈரானைச் சேர்ந்த மதவாத அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் நபிகள் நாயகத்தையும், இஸ்லாம் மதத்தையும் இழிவுபடுத்தி அமெரிக்காவில் எடுக்கப்பட்ட படத்தை கண்டித்து உலகின் பல்வேறு நாடுகளில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த படத்திற்கும் ருஷ்டிக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும் இஸ்லாத்திற்கு எதிராக செயல்படுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. 

No comments:

Post a Comment