பிளஸ் 2 தேர்வு முடிவில் அகில இந்திய அளவில் முதலிடத்தை பிடித்த முகமது இஸ்மத்

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவில், அகில இந்திய அளவில் முதலிடத்தை பிடித்து, சாதித்து காட்டிய மணிப்பூரைச் சேர்ந்த மாணவன் இஸ்மத், "முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தான், என் ரோல் மாடல். ஒருமுறையாவது, நான் படித்த பள்ளிக்கு அவர் வர வேண்டும். அவர் வந்தால், தேசிய அளவில் எங்கள் பள்ளிக்கு முக்கியத்துவம் கிடைப்பதோடு, தேவையான கட்டமைப்பு வசதிகளும் கிடைக்கும்' என, விருப்பம் தெரிவித்துள்ளார்.சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. வழக்கமாக, பெரு நகரங்களில் வசிக்கும், வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்த மாணவர்களே, தேசிய அளவில் முதலிடங்களை பிடிப்பர். ஆனால், இந்த முறை, இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான, வளர்ச்சியில் மிகவும் பின் தங்கியுள்ள, மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த மாணவன் இஸ்மத், தேசிய அளவில் முதலிடத்தை பிடித்து, சாதித்துக் காட்டியுள்ளான்.

துப்பாக்கி கலாசாரம்:பொதுவாக மணிப்பூர் என்றாலே, துப்பாக்கி, ஆள் கடத்தல், போதை மருந்து கடத்தல், வன்முறை, கடையடைப்பு போன்ற பிரச்னைகள் தான் அதிகம். மணிப்பூர் மாநிலம் பற்றிய செய்தி, தேசிய அளவில் பத்திரிகைகளில் வெளியாகிறது என்றால், அது, மேற்கூறிய ஏதாவது ஒரு காரணத்துக்காகத் தான், இருக்கும். முதல் முறையாக, கல்வியில் சாதித்து காட்டிய மாணவனின் சாதனைக்காக, மணிப்பூர் மாநிலம் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. முகமது இஸ்மத், 19, மணிப்பூரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொவ்பால் மாவட்டத்தை சேர்ந்தவர்.

வசதி இல்லை:தொலை தொடர்பு, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அதிகம் இல்லாத ஹெய்ரோபி என்ற குக்கிராமம் தான், இவருக்கு சொந்த ஊர். உள்ளூரில் உள்ள ஆங்கில வழி கல்வி பள்ளியில், தன் ஆரம்ப கல்வியை முடித்த இஸ்மத், இம்பாலில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார்.இதன்பின், இம்பாலில் உள்ள சைனிக் பள்ளியில் படித்த இஸ்மத், பத்தாம் வகுப்பு தேர்வில் 94.2 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார். இதையடுத்து, இம்பாலில் உள்ள மிகவும் பிரபலமான பள்ளியில் படிக்க விரும்பினார். போதிய பொருளாதார வசதி இல்லாததால், இவரது ஆசை நிறைவேறவில்லை. இதைத் தொடர்ந்து, அங்குள்ள ஜெனித் அகடமி பள்ளியில் சேர்ந்தார். அங்கும் அவரால் கட்டணம் செலுத்த முடியவில்லை. அவரது சிறப்பான செயல்பாடுகளை பார்த்த பள்ளி நிர்வாகம், பயிற்சி கட்டணம் மற்றும் பஸ் கட்டணம் செலுத்துவதில் இருந்து அவருக்கு விலக்கு அளித்தது. இதனால், தொடர்ந்து படித்த இஸ்மத், பிளஸ் 2 தேர்வில், தேசிய அளவில் முதலிடத்தை பிடித்து, அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தார்.

பூங்கொத்துக்கள்:இம்பாலில் உள்ள இஸ்மத்தின் வீட்டுக்கு சென்றபோது, அவரது வீடு முழுவதும் பூங்கொத்துகள் நிரம்பி இருந்தன. நாட்டின் பல இடங்களில் இருந்தும், அவரை பாராட்டி, தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமான மகிழ்ச்சியில் திளைத்திருந்தார் இஸ்மத். ஆனாலும், இந்த பாராட்டுகளும், பரிசுகளும் அவரை எந்த அளவிலும் பாதிக்காமல் மிகவும் எளிமையாகவே இருந்தார். 

"தினமலர்' நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தான், என் ரோல் மாடல். இயற்பியல் பாடம் மிகவும் கடினமானது என்றிருந்த நிலையை மாற்றி, அதை படிக்க தூண்டியவர் கலாம். அவரைப் போலவே எதிர்காலத்தில் நானும் விஞ்ஞானியாக விரும்புகிறேன். டில்லியில் உள்ள புனித ஸ்டீபன் கல்லூரியில் இயற்பியல் பட்டப் படிப்பு படிக்க வேண்டும் என்பது, என் ஆசை. கலாமின் எளிமை என்னை மிகவும் கவர்ந்து விட்டது. தற்போது தேசிய அளவில் முதலிடத்தை பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

கலாம் வர வேண்டும்: இந்த பேட்டி மூலமாக கலாமிடம் ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். ஒருமுறையாவது அவர், நான் படித்த பள்ளிக்கும், என்னுடைய கிராமத்துக்கும் வர வேண்டும். அவர் வந்தால், இங்குள்ள அடிப்படை மற்றும் கட்டமைப்பு வசதிகள் மேம்படும். எங்கள் பள்ளிக்கு தேசிய அளவில் முக்கியத்துவம் கிடைக்கும். அதிக வசதிகள் இல்லாத ஒரு கிராமத்தை சேர்ந்த நான், தேசிய அளவில் முதலிடம் பெறும்போது, அதேபோல், இங்குள்ள இன்னும் ஏராளமான மாணவர்களாலும் சாதிக்க முடியும். ஆனால், இங்குள்ள பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் மிகவும் மோசமாக இருப்பது, இதுபோன்ற சாதனைகளுக்கு தடையாக உள்ளது.இவ்வாறு இஸ்மத் கூறினார்... 

No comments:

Post a Comment