நாளை மறுநாள் பிளஸ் 2 தேர்வு 7.5 லட்சம் பேர் எழுதுகின்றனர்! ஜெனரேட்டர் கிடைப்பதில் சிக்கல்?


தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை மறுநாள் துவங்குகிறது. இதற்காக 1300 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சுமார் 7.5 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். தேர்வு மையங்களுக்கு ஜெனரேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 


தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை மறுநாள் (மார்ச் 8) துவங்குகிறது. இந்த தேர்வை சுமார் 1300 மையங்களில் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இத்தேர்வு வரும் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த மாதமே மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு முடிந்து விட்டது.
தேர்வு காலை 10 மணிக்கு துவங்குகிறது. மூன்று மணி நேர தேர்வு சரியாக 1.15 மணிக்கு முடியும். தேர்வை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்டு உபதலைவராக முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட போலீஸ் எஸ்பி, வருவாய் கோட்ட அலுவலர்கள், சார் ஆட்சியர், மாவட்ட ஆய்வு அலுவலர்கள், பகுதி படைத் தலைவர் (ஊர்காவல்) ஆகிய 4 பேர் உறுப்பினராகவும் மாவட்ட கல்வி அலுவலரை அமைப்பாளராகவும் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு தேர்வு மையத்திலும் ஒரு பறக்கும்படை கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். கணிதம், இயற்பியல், வேதியியல், ஆகிய தேர்வு அன்று அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர் குழுவும் தேர்வு மையத்தை பார்வையிட உள்ளது.  ஜெனரேட்டர் கிடைப்பதில் சிக்கல் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டால் தேர்வு பாதிக்கக்கூடாது என்பதற்காக அனைத்து தேர்வு மையத்திலும் ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த வேண்டும், இதற்கான கட்டணத்தை அரசு வழங்கும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஜெனரேட்டரை வாடகைக்கு எடுப்பது தொடர்பாக விலை புள்ளிகளை சேகரித்துள்ளனர்.

ஜெனரேட்டர் வாடகை, டீசல், ஒரு நபர் சம்பளம், இறக்கி ஏற்றும் கூலி என ஒரு நாள் தேர்வுக்கு குறைந்தபட்சம் ரூ.1200 முதல் ரூ.1500 வரை கேட்டு தனியார் ஜெனரேட்டர் வாடகைக்கு விடுவோர் புள்ளி விவரம் கொடுத்துள்ளனர். மேலும் ஒரு மாவட்டத்திற்கு ஒரு நாளைக்கு 70 முதல் 130 ஜெனரேட்டர்கள் வரை தேவைப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது 10 மணி நேரம் மின்வெட்டு அமலில் இருக்கிறது. இதனால் தனியார் நடத்தும் விழாக்கள், திருமணங்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஜெனரேட்டர் வாடகைக்கு பெறப்படுகிறது. இதனால் போதுமான அளவுக்கு ஜெனரேட்டர் கிடைக்குமா? என்ற சிக்கல் எழுந்துள்ளது.

jaffawin

No comments:

Post a Comment