தமிழக பள்ளிகளில் வகுப்புகளின் நேரம் அரை மணி நேரம் அதிகரிப்பு!


தமிழகத்தில் இந்த ஆண்டு பாடசாலைகள் துவங்குவதில் ஏற்பட்ட காலதாமதத்திற்கு ஈடுசெய்யும் வகையில், தற்போதைய பள்ளி நேரத்தை மேலும் 30 நிமிடங்கள் அதிகரிக்க, தமிழக கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சமச்சீர் கல்வி திட்டத்தினைத் தொடர வேண்டாமென தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால், இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்ததால், பாடசாலைகள் துவங்குவதில் கடும் காலதாமதம் ஏற்பட்டது.
பின்னர், நீதிமன்ற தீர்ப்பு சமர்ச்சீர் கல்வி திட்டத்துக்கு ஆதரவாக வந்ததைத் தொடர்ந்து மிகத் தாமதமாக பாடசாலைகள் ஆரம்பித்தன. தாமதமாக பாடசாலைகளில் பாடங்கள் துவங்கியதால், கல்வியாண்டு இறுதிக்குள் பாடங்களை முடிப்பது இயலாத நிலை ஏற்பட்டது. பாடங்களைக் கல்வியாண்டு இறுதிக்குள் முடிப்பதற்கு வசதியாக, பாடசாலை கல்வி நேரத்தைத் தற்போது உள்ளதை விட, 30 நிமிடங்கள் அதிகரிக்க தமிழக கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இந்தக் கூடுதல் நேரம் மூலம் ஏற்கெனவே ஏற்பட்ட காலதாமதம் சீர் செய்யப்படும் என தெரிகிறது. இதற்கான உத்தரவு அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வி துறை அனுப்பி உள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர்,
"பள்ளி நேரம் அதிகரிக்கும் முடிவு கடந்த 2 மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்டது. ஆனால் இந்த நேர அதிகரிப்பு துவக்கப் பள்ளிகளில் அமல்படுத்தப்படாது. மேல்நிலை மற்றும் நடுநிலை பள்ளிகளில் மட்டுமே அமல்படுத்தப்படும்" என்று கூறினார்.

Inneram

No comments:

Post a Comment