மத்திய அரசிற்கு கடிதம்: இந்திய ராணுவத்தின் திடுக்கிடும் தகவல்கள்

யுத்தம் வந்தால் எங்களால் சமாளிக்க இயலாது. இராணுவ ஆயூதக் கிடங்குகள் வெற்றிடமாக உள்ளது என இராணுவம் மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளது.
திடீரென யுத்தம் வந்தால் அதனை எதிர்கொள்ளும் அளவிற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் கையிருப்பில் இல்லை என்று இந்திய இராணுவம் பகீர் தகவல் ஒன்றை தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


அடுத்த ஓரிரு வாரங்களிலோ அல்லது மாதத்திலோ ஒரு யுத்தத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை எழுந்தால் நாட்டை பாதுகாக்கும் அளவிற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் இராணுவத்திடம் இல்லை என்றும், இந்த நிலைமையை விளக்கி மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள இராணுவம் அதில் ஆயுத கையிருப்பு தற்போது இக்கட்டான நிலைக்கும் கீழாக உள்ளது என்று தெரிவித்துள்ளதாக முன்னணி ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


இராணுவத்தின் இந்த கடிதத்தை தொடர்ந்து இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் அவசரக்கால அடிப்படையில் சில குறிப்பிட்ட ஆயுதங்களை கொள்முதல் செய்ய தொடங்கி உள்ளதாகவும், சில வகை ஆயுதங்கள், பாதுகாப்பு அமைச்சகம் வகுத்து வைத்திருந்த கொள்கையை மீறி கொள்முதல் செய்யப்படுவதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.


ஒரு வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஆயுதங்கள் கொள்முதல் செய்தால், கொள்முதல் செய்யும் மதிப்பில் 30 விழுக்காடு தொகையை இந்தியாவில் மீண்டும் முதலீடு செய்யவேண்டும் என்பது பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆயுதக் கொள்முதல் கொள்கை. ஆனால் தற்போதுள்ள ஆபத்தான நிலையை கருத்தில்கொண்டு அந்த கொள்கை பின்பற்றப்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் குறிப்பிட்ட சில ஆயுதங்களின் கையிருப்பு தற்போது குறைந்துபோனதற்கு கடந்த காலங்களில் குறிப்பிட்ட சில ஆயுத விற்பனை நிறுவனங்களை அரசு கறுப்பு பட்டியலில் வைத்திருந்ததுதான் காரணம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


NewIndiaNews

No comments:

Post a Comment