லண்டன் கலவரத்தில் வாழ்க்கையை இழந்தோம்

லண்டன், ஆக. 14: லண்டனில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட கலவரத்தில் தங்கள் வாழ்க்கையை இழந்துவிட்டதாக கூறும் இந்தியத் தம்பதியினர், விரைவில் நாடு திரும்ப முடிவு செய்துவிட்டதாகக் கூறுகின்றனர்.


இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகே உள்ள தொட்டென்ஹாம் பகுதியைச் சேர்ந்தவர் மார்க் துக்கன். கள்ளத் துப்பாக்கி விற்பதாகக் கூறி அவரை பிடிக்க முயன்ற போது, போலீஸôரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து லண்டன் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வன்முறை வெடித்தது.
லண்டனில் உள்ள கிராய்டன் நகரிலும் பெரும் கலவரம் வெடித்தது. இதில் ஏராளமான வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. அனைத்துக் கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்தியாவைச் சேர்ந்த ஒரு தம்பதி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் குடியேறினர்.
கேரளத்தைச் சேர்ந்த லிஸ்லி ஜார்ஜ் (37), பினு மேத்யூ (40) என்ற இந்தத் தம்பதிகளுக்கு நடந்த கொடுமை குறித்து இதுவரை யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தச் சம்பவத்தையடுத்து இவர்கள் மீண்டும் இந்தியா திரும்ப முடிவெடுத்து விட்டனர்.
அந்தக் கொடூர இரவு வேளையில், தான் நர்ஸôக வேலைபார்க்கும் கிராய்டன் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு புறப்படத் தயாரானார் லிஸ்லி. அப்போது திடீரென இவர்களது வீட்டில் நுழைந்த கலவரக் கும்பல் ஒன்று, இவரைப்பிடித்து இழுத்து சீருடையை கிழித்தெறிந்தது. கைப்பையை பிடுங்கி அதில் இருந்த பொருள்களை எடுத்துக்கொண்டது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது கணவர் மேத்யூ, தனது மனைவியை அவர்களிடமிருந்து காப்பாற்ற முயன்றபோது, கலவரக்காரர்களுடன் வந்த ஒரு பெண், இவரது முகத்தில் ஓங்கி குத்திவிட்டு அங்கிருந்து ஓடினாள். அவளைத் தொடர்ந்து கும்பலும் அந்த இடத்தை விட்டு அகன்றது. அதில் மேத்யூவுக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
அச்சத்தில் உறைந்து போன அவர்களுக்கு அடுத்த அதிர்ச்சியாக அருகே அவர்கள் நடத்தி வந்த உணவகம் முற்றிலுமாக சூறையாடப்பட்டது தெரியவந்தது. எஞ்சிய பொருள்களும் அடித்து நொறுக்கப்பட்டு கிடந்தன.
செய்வதறியாது திகைத்துப் போன இருவரும், கடையின் ஷட்டரை இழுத்து மூடிவிட்டு தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வீட்டுக்குள் தஞ்சம் புகுந்தனர்.
இது குறித்து மாத்யூ கூறுகையில், நாங்கள் கேரளம் திரும்ப முடிவு செய்துள்ளோம். லண்டனில் இவ்வாறு நடக்கும் என நாங்கள் நினைக்கவே இல்லை.
அவர்களின் இத்தகைய செயல்களால் அவர்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. இருந்தும் அவர்கள் கொஞ்சம் கூட வெட்கப்படாமல் அப்படி நடந்து கொண்டார்கள். பாடுபட்டு சேர்த்த அனைத்தையும் அவர்கள் நாசமாக்கிவிட்டனர் என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
தனக்கு நேர்ந்ததை விவரித்த லிஸ்ஸி, எனது பணிச்சீருடையை கிழித்து என்னை அரை நிர்வாணமாக்கிவிட்டனர். அத்துடன் விடாமல் அதே நிலையில் என்னை இழுத்துக்கொண்டு போய் நடுத்தெருவில் நிற்கவைத்தனர். கொடூர மிருகங்கள் போல அவர்களின் செயல் இருந்தது.
எனது திருமணச் சங்கிலி உள்பட அனைத்தையும் இழந்து விட்டோம். அந்த பயங்கர இரவுக்குப் பிறகு என்னால் தூங்க முடியவில்லை. குடும்பத்தை நடத்த பணம் வேண்டும். அதற்காகவாவது வேலைக்கு போக நினைக்கிறேன். ஆனால் அதுவும் முடியவில்லை என்றார்.
மாத்யூ கூறுகையில், கடைக்கு முன் நிறுத்தியிருந்த எங்கள் வேன் ஒன்றையும் தீ வைத்து எரித்துவிட்டனர். அனைத்தும் போய்விட்டது. காப்பீடு மூலம் ஏதோ கொஞ்சம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
நான் இழந்தவற்றுக்காக யாரிடமும் எந்தவித நஷ்டஈடும் கேட்கப்போவதில்லை என்றார் திட்டவட்டமாக.
சம்பவம் நடந்த அந்த இரவு, மீண்டும் மீண்டும் நினைவலைகளில் சுழல்வதால் இரவு வேளைகளை பேசியே கழிப்பதாக விரக்தியுடன் கூறுகின்றனர் இந்தத் தம்பதிகள்.Thinamani

No comments:

Post a Comment