தமிழர்களை அவமதித்து பேசியதற்காக வருத்தம் தெரிவித்தார் அமெரிக்க தூதர்


தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள் என்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க துணைத் தூதரகத்தில் உதவித் தூதராக பணியாற்றி வரும் மெளரீன் சாவோ கலாச்சாரம் குறித்த படிப்பில் சேர்ந்துள்ளார்.
சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் உதவித் தூதராக பணியாற்றிவருபவர் மெளரீன் சாவோ. இந்தப் பெண்மணி சென்னை எஸ்.ஆர்எம் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில்,"நான் இந்தியாவில் 20 வருடங்களுக்கு முன்பு படித்த போது ரயிலில் பயணம் செய்தேன்.அப்போது நீண்ட நேரப் பயணத்தால் எனது நிறம், தமிழர்களைப் போல கறுப்பாகவும், அழுக்காகவும் மாறி விட்டது" என்றார்.
இவரது இந்த நிற வெறிப் பேச்சுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. வழக்கம் போல மத்திய அரசு இதுகுறித்தெல்லாம் மூச்சு காட்டவில்லை.
இந்தநிலையில் தற்போது மெளரீன் கலாச்சாரம் குறித்த விழிப்புணர்வுப் படிப்பில் சேர்ந்துள்ளாராம். மேலும் தமிழர்களின் நிறம் குறித்து தான் பேசிய பேச்சுக்கும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நூலன்ட் கூறுகையில்,"மெளரீன் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். பல நாட்டு கலாச்சாரம் குறித்த புரிந்துணர்வு வகுப்பில் அவர் சேர்ந்துள்ளார். இது அவருக்கு உபயோகரமானதாக இருக்கும் என நம்புகிறோம்" என்றார்.
மெளரீனின் கருத்துக்கள் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்பதில் சந்தேகம் இல்லை. அவர் உடனடியாக தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டு விட்டார். தற்போது அவராகவே பலநாட்டு கலாச்சாரம் குறித்த படிப்பில் இணைந்துள்ளார்.
இருப்பினும் அவரது கருத்துக்கள் தவறானவை, ஏற்க முடியாதவை, அமெரிக்க கலாச்சாரத்திற்கு முற்றிலும் புறம்பானவை என்று தெரிவித்தார்.

NewIndiaNews

No comments:

Post a Comment