சவுதி அரேபியாவில் பின்லேடன் நிறுவனங்களில் சிக்கி தவிக்கும் இந்தியவர்கள்


சவுதி அரேபியாவில் பின்லேடன் குரூப் கம்பெனியில் வேலைக்காக சென்ற இந்தியர்கள் பலர் அடிமைகளாக கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.
அல்கொய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடனின் சகோதரர்கள், சகோதரிகள் சவுதி அரேபியாவில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.
அவற்றில் வேலை செய்ய இந்தியர்கள் பலர் தரகர்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளனர். பீகார் மாநிலம் பக்சார் மாவட்டத்தில் இருந்து சென்ற 12க்கும் அதிகமான தொழிலாளிகள் பின்லேடன் நிறுவனத்தில் அடிமைகளாக வேலை செய்யும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தாய்நாடு திரும்ப முடியாமல் அவர்கள் அங்கு தவித்து வருகின்றனர். அவர்களுக்கு சம்பளம் வழங்குவதில்லை, சரியான உணவு இல்லை. தங்கும் இடத்தில் அடிப்படை வசதிகள் சரியில்லை. பல மணி நேரம் வேலை வாங்குகின்றனர். தாய்நாடு திரும்ப விரும்புபவர்களை சித்ரவதை செய்கின்றனர் என்று அவர்கள் தகவல் அனுப்பி உள்ளனர்.
இதை அறிந்த தொழிலாளிகளின் உறவினர்கள், மாநில தொழிலாளர் நலத்துறையின் உதவியை கேட்டுள்ளனர். சவுதியில் சித்ரவதை அனுபவித்து வருபவர்களை மீட்டு இந்தியாவுக்கு திரும்ப அழைத்து வரவேண்டும் என்று அதிகாரிகளை கண்ணீர் விட்டு கெஞ்சி கொண்டிருக்கின்றனர்.
படிப்பறிவு இல்லாத பீகார் மக்களை இடைத்தரகர்கள் அணுகி ஆசை வார்த்தை கூறி வளைகுடா நாடுகளுக்கு ஏஜென்சிகள் மூலம் அனுப்பி விடுகின்றனர். அங்கு கட்டிட வேலை உள்பட கடுமையான வேலைகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இதுபோல் ஆண்டுதோறும் 60 ஆயிரத்துக்கும் அதிகமான பீகார் மக்கள் வளைகுடா நாடுகளுக்கு செல்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2008ம் ஆண்டு புள்ளிவிவரப்படி 8.5 லட்சம் இந்தியர்கள் பல வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் படிப்பறிவு இல்லாதவர்கள். அங்கு சென்ற பிறகு எல்லா விதமான கொடுமைகளுக்கும் ஆளாகின்றனர்.
சில நேரங்களில் வேலைக்கு அனுப்புவதாக கூறி வெளிநாடுகளுக்கு செல்வோரிடம் கடத்தல் பொருட்களையும் கொடுத்து அனுப்பி விடுகின்றனர். விமான நிலையங்களில் அவர்கள் சிக்கும் போது சம்பந்தப்பட்ட ஏஜென்சிகள், தரகர்கள் தப்பி விடுகின்றனர். அப்பாவி மக்கள் வெளிநாடுகளில் சிறை தண்டனை பெறும் அவல நிலையும் உள்ளது.
பீகார் தவிர ஆந்திரா, தமிழ்நாடு, கேரளாவை சேர்ந்தவர்கள் தான் அதிக எண்ணிக்கையில் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்காக செல்கின்றனர். வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் பல நிறுவனங்கள் அரசிடம் அனுமதி பெறாதவை.
சட்டவிரோதமான அந்த ஏஜென்சிகளை நம்பி பலர் மோசம் போகின்றனர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அதேநேரத்தில் வெளிநாடுகளில் இருந்து தங்கள் குடிமக்கள் மூலம் அதிக பணம் பெறும் நாடுகளில் இந்தியாவும் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் கேரள மக்கள் தான் வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டுக்கு அதிகம் பணம் அனுப்புகின்றனர்.

NewIndiaNews

No comments:

Post a Comment