போலி நிறுவனங்கள்: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து பதிவுச் சான்றிதழ் பெறாமல், அயல்நாட்டு நிறுவனம் போன்று தோற்றமளிக்கும் ஒரு நிறுவனம், இந்தியாவில் இயங்கி வருவது இந்திய ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு வந்துள்ளதாகவும் பொதுமக்கள் அந்த நிறுவனத்தில் தங்கள் முதலீடுகளை செய்ய வேண்டாம் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

பொது மக்களிடமிருந்து வைப்புகளைப் பெறுவதற்காக, போலியான ஒரு பதிவுச் சான்றிதழை, அந்நிறுவனம் தனது இணையதளத்தில் வெளியிட்டு இந்திய ரிசர்வ் வங்கியின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளது.

ஃபாரக்ஸ் அச்சிவ்மெண்ட்ஸ் என்ற பெயரில் எந்த நிறுவனமோ, அமைப்போ கம்பெனிகள் சட்டம் 1956-ன் கீழ் பதிவு செய்து, இந்திய ரிசர்வ் வங்கியின் பதிவு சான்றிதழ் பெறுவதற்கான ஒரு நிபந்தனையாகும். ஆனால், அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஏப்ரல் 7, 2010 தேதியிட்ட பதிவுச் சான்றிதழ் எண் 07.00410 போலியான ஒன்றாகும். அது இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்படவில்லை. இத்தகைய பதிவு செய்யப்படாத நிறுவனங்களில் தங்கள் பணத்தைப் போட வேண்டாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி பொது மக்களை எச்சரித்துள்ளது. இத்தகைய பதிவு செய்யப்படாத நிறுவனங்களில் பணத்தைப் போடுபவர்கள் தங்களின் சொந்த பொறுப்பிலேயே அதைச் செய்கிறார்கள்.

இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் சட்டப்பிரிவு எண். 45-S (1)-ன்படி அந்த நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து வைப்புகள் பெறுவது தடை செய்யப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934-ன் சட்டப்பிரிவு எண் 45-T(1)-ன் கீழ் அத்தகைய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரமுண்டு. பரிசுச்சீட்டுகள் மற்றும் பணச்சுழற்சி தடைச்சட்டம் 1978-ன் கீழ், பண சுழற்சி திட்டங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. அவை அந்தந்த மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன. ஆகவே, அதிகாரமின்றி வைப்புகளைப் பெறுதல், பணச் சுழற்சி திட்டங்களை நடத்துதல் ஆகியவை குறித்து இந்திய ரிசர்வ் வங்கி பெறும் புகார்கள் உடனடியாக குறிப்பிட்ட மாநில அரசுகளின் பொருளாதாரக் குற்றவியல் பிரிவுக்குத் தெரிவிக்கப்படும்.

இந்நிறுவனங்களில் முதலீடு செய்வதில் கவனமாக இருக்கும்படியும், வைப்புகளைப் பெறுவதற்கு தகுதியுடையனவா என்பதைத் தெரிந்து கொள்ளும்படியும் இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ள நிதிநிறுவனங்களின் பெயர்பட்டியல் www.rbi.org.in என்ற இணையதளத்தில் கிடைக்கும் என இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment