1400 வருடங்கள் தொன்மையான மசூதியில் புனரமைப்பு வேலை!

இந்தியாவிலேயே முதன்மையானதும், மிகவும் பழமையானதும் என நம்பப்படும், கேரளத்தில் கொடுங்களூரில் உள்ள சேரமான் ஜும்மா மசூதி அதன் உண்மையான தொன்மை வடிவில் கட்டப்பட உள்ளது. வரும் செப்டம்பர் மாதம் துவங்க இருக்கும் இதன் புனரமைப்புப் பணிகளுக்கு இம்மசூதியின் நிர்வாகக் குழு இறுதி வடிவம் கொடுத்துள்ளதாக மசூதியின் நிர்வாகத் தலைவர் பி.ஏ.முகமது சையது கூறியுள்ளார்.
1400 வருடங்கள் தொன்மையான இப்பள்ளி வாசல் தொழுகையாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப பல முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சேரமான் ஜும்மா மசூதி ஒரு கலாசார சின்னம் என்பதால் அதன் உண்மை வடிவத்திலேயே அது பாதுகாக்கப்படவேண்டும் என்று முகமது சையது கூறியுள்ளார்.
சேரமான் பெருமாள் வாழ்ந்த காலத்தில், மாலிக் பின் தினார் என்பவரால் கி.பி. 629 ஆம் ஆண்டில் இது கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
தொன்றுதொட்டு சொல்லப்பட்டு வரும்   கதையின்படி, சேரமான் பெருமாள் மக்கா நகர் சென்று இறைத்தூதுவர் முகமது நபியை நேரில் சந்தித்து இஸ்லாத்தைத் தழுவியுள்ளார். மக்காவிலிருந்து திரும்புகையில் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. மாலிக் பின் தினாரும் மற்றும் சிலரும் கொடுங்களூருக்கு வந்து, சேரமான் பெருமாள் இஸ்லாத்தைத் தழுவியபின் ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி எழுதிய கடிதத்தை ஆட்சியாளர்களிடம் கொடுத்துள்ளனர். மாலிக் பின் தினாரும் அவரது சகாக்களும் மசூதி கட்டிக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். மசூதியின் தலைமை காஸியாக இருந்து வந்த மாலிக் பின் தினார்  அரேபியாவிற்கு திரும்பவேண்டி வந்தபோது, அவரது மருமகன் ஹபீப் பின் மாலிக் அப்பொறுப்பை ஏற்றுள்ளார்.
இம்மசூதி முதன்முதலாக 11ஆவது நூற்றாண்டில் புனரமைக்கப்பட்டது. இறுதியாக 1974ம் ஆண்டு புனரமைக்கப்பட்டுள்ளது. அப்போது பழைய மசூதியின் முன் பகுதியை இடித்துவிட்டு கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டது. மசூதியின் உட்புறமிருந்த தொன்மையான பகுதிகள் அப்படியே விடப்பட்டன. தொழுகையாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு ஏற்ப 1996 மற்றும் 2003ம் ஆண்டுகளில் மசூதி அகலப்படுத்தப்பட்டது. இவ்வாறு முகமது சையது கூறியுள்ளார்.
புனரமைப்பு வேலைக்கான மண் பரிசோதனை செய்யும் பணி முடிந்துள்ளது. செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் வேலைகள் துவங்கி மூன்று வருட காலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மசூதி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
மசூதி புனரமைக்கப்பட்டபின், பூமி மட்டத்தின் கீழ் 3,000 பேர் தொழக்கூடிய இரு ஹால்களைக் கொண்டதாக இருக்கும். உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல பிரபலங்கள் இம்மசூதிக்கு வருகை புரிந்துள்ளனர். மசூதியில் இந்து முறைப்படி “வித்யாரம்பம்” (எழுத்துலக பிரவேசத்தின் துவக்கம்) எனும் சடங்கு நடத்தப்பட்டுள்ளது.

Inneram

No comments:

Post a Comment