இந்தியாவுடன் உறவு பலப்பட சவூதி விருப்பம்: இளவரசி ஆதிலா

இந்தியா-சவூதிஅரேபியா இடையே இருதரப்பு உறவுகளை, குறிப்பாக கலை-இலக்கியத் துறையில் நல்ல நெருக்கத்தை முன்னெடுக்க சவூதி அரேபியா விரும்புகிறது என்று சவூதி இளவரசி ஆதிலா பின்த் அப்துல்லா அப்துல் அஸீஸ் தெரிவித்துள்ளார்.
சவூதிஅரேபிய தேசிய அருங்காட்சியகத்தின் ஆட்சிமன்றக் குழுத் தலைவியாக உள்ள இளவரசி ஆதிலா சவூதி அரேபியாவுக்கான இந்தியத் தூதர் தல்மீஸ் அஹமதுவின் மனைவி சுனிதாவுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த போது இவ்வாறு கூறினார்.
"கலைத்துறையில் பெண்கள் - பிரதிபலிப்புகள்" என்ற தலைப்பில் சவூதி-இந்திய கலைக் கண்காட்சி எதிர்வரும் ஏப்ரல் 30 முதல் மே 27 வரை அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ள தகவலையும் ஆதிலா அப்போது தெரிவித்தார். இக்கண்காட்சியை இந்தியத் தூதரகத்துடன் இணைந்து  சவூதி தேசிய அருங்காட்சியகம் நடத்துகிறது.
"இந்தியக் கலாச்சாரம் மிகச் செழுமையானது. சவூதி உட்பட பல்வேறு நாட்டுக் கலாச்சாரங்களில் அது தாக்கம் ஏற்படுத்தியுள்ளது. 36 சவூதி பெண் கலைஞர்களுடன் 18 இந்தியப் பெண் கலைஞர்களும் பங்கு பெறும் இந்தக் கண்காட்சியால், அனைவரும், குறிப்பாக சவூதி அரேபியர்கள் நல்ல பயனடைவார்கள்" என்று தாம் நம்புவதாகவும் இளவரசி ஆதிலா தெரிவித்தார்.
இக்கண்காட்சியின் பொருட்டு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், 15 இந்தியப் பெண் கலைஞர்கள் சவூதி வருகை தர உள்ளதாக சுனிதா அஹமது தெரிவித்தார். மன்னர் சவூத் பல்கலைகழகம், இளவரசி நூரா பல்கலைகழகம் ஆகியவற்றில் இந்தியக் கலைஞர்கள் பயிலரங்குகளையும் நடத்துவார்கள்.
சவூதியின் பிரபல பெண் கலைஞர் ஷரீஃபா அல் சுதைரி  கூறுகையில் "சவூதியும் இந்தியாவும் முதன்முறையாக இக்கண்காட்சியை இணைந்து நடத்துகின்றன, எதிர்காலத்தில் இத்தகைய கண்காட்சிகளை அதிகமதிகம் நடத்த வேண்டும், கவிதை-இலக்கியத் துறைகளிலும் இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்

.

No comments:

Post a Comment