இரவு பார்ட்டிகள் மூலம் எய்ட்ஸ் பரவல்: ஐ.நா. ’பகீர்’ அறிக்கை!

பெருநகரங்களில் நடக்கும் இரவு பார்ட்டிகள் மூலம், உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் பரவுவதாக, ஐ.நா. சபையின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில், தினமும் 7,000 பேர் எய்ட்ஸ் நோய் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இதில், 1,000 பேர் குழந்தைகள். இந்நோயால், தற்போது, உலகம் முழுவதும் 2.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 23 சதவீதம் பேர், 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும்  இளம் பெண்கள்.
அண்மையில், ஐ.நா. சபை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்தியா, சீனா, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய ஆறு ஆசிய நாடுகளில், இந்நோய் மிக வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா உள்ளிட்ட ஆறு ஆசிய நாடுகள், பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. இந்நாடுகளின் மக்கள் தொகையில், இளைஞர்கள் சதவீதம் 2031ம் ஆண்டில் அதிகமாக இருக்கும்.
அதே நேரத்தில், தற்போது இந்நாடுகளில் உள்ள இளைஞர்கள், இரவு பார்ட்டிகளுக்குச் செல்லும் கலாசாரம், அதிகரித்து வருகிறது. இந்த பார்ட்டிகளின் கலந்து கொள்ளும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள், மது, போதை பொருட்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்துகின்றனர்.இதன் காரணமாக, பார்ட்டிகளில், நடனமாடுதல் உள்ளிட்ட கொண்டாட்டங்களின் போது, தங்களை மறந்த நிலையில், பாதுகாப்பற்ற நிலையில், பாலுறவு கொள்ளுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
மேலும், இந்த பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் இளைஞர்களும், இளம் பெண்களும் ஒரே ஊசி மூலம் போதை மருந்துகளையும் எடுத்துக் கொள்கின்றனர். இதன் காரணமாக, உயிர்கொல்லி நோயான எய்ட்ஸ் நோய் தொற்று ஏற்படுகிறது. இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில், போதை ஊசிகள் பயன்படுத்துவதன் மூலம், இந்நோய் அதிகமாக பரவுகிறது.
இந்த ஆறு ஆசிய நாடுகளில், ரசாயன பொருட்களைக் கொண்டு, புதிதாக போதை பொருட்களை உற்பத்தி செய்யும் கலாசாரமும் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க போலீசார், தொழிற்சாலைகள், ஓட்டல்கள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தங்கள் பிள்ளைகள், இரவு பார்ட்டிகளில் கலந்து கொள்வது தொடர்பான விவகாரங்களில், பெற்றோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment