இணைய சுதந்திரம்: 14ம் இடத்தில் இந்தியா

இணையத்தில் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 14ம் இடம் கிடைத்துள்ளது.
எஸ்டோனியா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்க நிறுவனமான பிரீடம் ஹவுஸ் உலகம் முழுவதும் நிகழும் ஜனநாயக மாற்றங்கள், மனித உரிமை மற்றும் கருத்துரிமை ஆகியவற்றை கண்காணித்து வருகிறது.
இந்நிறுவனம் இணையத்தில் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்வதற்கும், அதை பார்ப்பதற்கும் அனுமதிக்கப்படும் முன்னணி 37 நாடுகளை பட்டியலிட்டுள்ளது. சர்வதேச அளவில் இந்தியா 14ம் இடத்திலும், எஸ்டோனியா முதலிடத்திலும் உள்ளது. ஆசிய அளவில் தென்கொரியா முதலிடத்திலும், இந்தியா 2ம் இடத்திலும் உள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை பிளாக்குகளில் எழுதுவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு துறை சார்ந்தவர்களும் தங்கள் கருத்துக்களை பிளாக்குகளில் துணிச்சலுடன் வெளியிடுகின்றனர். சிலர் முரண்பாடான கருத்துகளை வெளியிட்ட போதிலும் அரசுத் தரப்பிலிருந்தோ, சம்பந்தப்பட்ட தனி நபரிடமிருந்தோ பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பவில்லை.
எனினும் ஓரிரு சம்பவங்களில் பிளாக்கர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக இந்தியாவின் புகழுக்கு களங்கம் ஏற்படும் வகையில் ஒரு கருத்தை இணையத்தில் வெளியிட்டதாகக் கூறி லக்ஷ்மண கைலாஷ் என்பவர் 50 நாள் சிறையில் அடைக்கப்பட்டார்.
எனினும் கடந்த 2008 நவம்பரில் மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் மற்றும் மாவோயிஸ்ட் அமைப்பினரின் தாக்குதல்கள் உள்ளிட்ட பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கின்றன.
எனவே இணைய சுதந்திரம் தீவிரவாதத்துக்கு துணைபோகிறதா என்பதை அரசு கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியம். இவ்வாறு அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் இணைய பயன்பாடு கிராமப்புறங்களில் மிகவும் குறைவாகவே உள்ளது. இங்கு 42 லட்சம் பேர் மட்டுமே இணையத்தை பயன்படுத்துவதாக புள்ளி விவரம் கூறுகிறது. இது நகர்ப்புறங்களில் பயன்படுத்துபவர்களைவிட 10 மடங்கு குறைவாகும்.


NewsIndiaNews

No comments:

Post a Comment