கருணைக் கொலைக்கு அனுமதி மறுத்தது உச்ச நீதிமன்றம்

37 வருடங்களாக 'பறிக்கப்பட்ட காய்கறி'யைப் போன்று கோமா எனும் இயல்பறுந்த நிலையில் கிடக்கிறார் அப்பெண்.

அருணா ஷான்பாக் என்னும் பெயருடைய அவர்,  தான் செவிலியராகப் பணிபுரிந்த மும்பையின் கே.இ.எம். மருத்துவமனை (King Edward Memorial Hospital) யில் சக ஊழியன் ஒருவனால் கடும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் இந்நிலைக்கு ஆளானார். இன்றும் அதே மருத்துவமனையில் 'சிகிச்சை' பெற்று வரும் அருணாவை சக செவிலித் தோழியரே கவனித்து வருகின்றனர்.

தன்னை கவனித்து உணவூட்டும், குளிப்பிக்கும் செவிலியரைக் கண்டு அவ்வப்போது சில புன்னகைகள், அவர்களின் நம்பிக்கையூட்டும் பேச்சுகளுக்கு விழியால் மறுமொழிவது ஆகியவையே இன்று அருணாவால் செய்ய முடிவது. 63 வயதாகும் அருணாவுடன் இதே கே.இ.எம். மருத்துவமனையில் பணிபுரிந்த அனைவரும் வயது காரணமாக ஓய்வு பெற்றுவிட்டனர்.

சோஹன்லால் வால்மீகி என்ற துப்புரவுப் பணியாளன் ஒருவனால் 1973ஆம் வருடம் நவம்பர் 27 அன்று அருணா பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். பணிமுடிந்து உடை மாற்றிக் கொண்டிருந்த அருணாவின் மீது பாய்ந்து, நாய்ச் சங்கிலியால் அவர் கழுத்தில் இறுக்கிக் கட்டிய அந்த காமுகனால், சுவாச வாயு கிட்டாமல், மூளை நரம்புகளும் பாதிக்கப்பட்டு அருணா தன் உணர்வையும் வாழ்வையும் இழந்தார்.

அவருடைய தோழி பிங்கி விரானி என்பவர் அருணாவின் நிலை காணச் சகியாமல், அருணாவுக்கான உயிர் ஆதார முறைமைகளை நிறுத்தி அவரை கருணைக் கொலை செய்வதற்கு அனுமதி கேட்டு நீதி மன்றத்தில் மனுச் செய்திருந்தார். "அருணா கண்ணியமாச் சாவதற்கு உதவ வேண்டும்" என்று அவர் மனுவில் கோரியிருந்தார்.

ஆயினும், கே.இ.எம். மருத்துவமனை நிர்வாகம்  "தங்களுக்கு அருணா ஒரு சுமையாக இல்லை" என்றும் "அவர் இயற்கையான சாவைத் தழுவும் வரை தாங்கள் அவரைப் பராமரிக்க தயார்" என்றும் தெரிவித்திருந்தது.

மேலும், 'பக்குவமடையாத  இந்தியச் சமூகத்தில் கருணைக் கொலைகளுக்கான அனுமதி வேறு சில திரிபுகளுக்கு இட்டுச் செல்லும் சாத்தியமுடையதால் அதை அனுமதிக்கக் கூடாது" என்றும் அது வாதிட்டது.

இது பற்றி கடந்த நான்கு நாள்களுக்கு முன் கருத்துத் தெரிவித்திருந்த நீதிபதிகள் "சொத்து கவர்தலுக்கு கருணைக் கொலைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் அபாயம் உள்ளது" என்று கருத்து அளித்திருந்தனர். "இதுவரை ஒரு சிறு படுக்கைப் புண்ணும் ஏற்பட்டுவிடாமல் அருணாவை கவனித்துக் கொள்ளும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு நீதிபதிகள் பாராட்டுத் தெரிவித்திருந்தனர்.

பிங்கி விரானியின் கருணைக் கொலை அனுமதி கேட்பு மனு மீது இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் அவருடைய மனுவை தள்ளுபடி செய்தனர். அதே சமயம், நாடாளுமன்றம் கருணைக் கொலைகள் மீதான சட்ட வடிவை ஏற்படுத்தும் விதமாக, சில வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளனர்.

அதன்படி, நோயாளியோ அல்லது நெருங்கிய உறவினர்களாலோ மட்டுமே கருணைக் கொலைக்கான அனுமதி கோரப்பட வேண்டும் எனவும், அதன்பின்னர், மருத்துவ நிபுணர் குழு வொன்று நன்கு ஆராய்ந்து ஒரு ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், நீதிமன்றமே இதில் முடிவான முடிவு சொல்லும் அதிகாரம் கொண்டது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Inneram

No comments:

Post a Comment