பழைய மின்மோட்டாருக்கு பதிலாக இலவசமாக புதிய மோட்டார்

சிறு, குறு விவசாயிகளிடம் உள்ள பழைய மின்மோட்டார்களுக்கு பதிலாக இலவசமாக புதிய மின்மோட்டார்கள் பொருத்தும் திட்டத்தின் கீழ், நடப்பு நிதியாண்டில் ரூ.22 கோடி செலவில் 10 ஆயிரம் பம்பு செட்டுகள் மாற்றி அமைக்கப்படும் என்று அரசு ஆணையிட்டுள்ளது.
இதுகுறித்து நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:- 

சென்னையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி நடந்த சுதந்திர தின விழாவில், முதல்- அமைச்சர் கருணாநிதி பேசும்போது, மின்சார சிக்கனத்தை மேற்கொள்வதற்காக சிறு மற்றும் குறு விவசாயிகளின் பம்பு செட்டுகளில் உள்ள பழைய மின்மோட்டார்களை நீக்கிவிட்டு, அவற்றிற்கு பதிலாக புதிய மின்மோட்டார்கள் அரசு சார்பில் இலவசமாக பொருத்தித் தரப்படும் என்றும், மற்ற விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்துடன் புதிய மோட்டார்கள் பொருத்தித் தரப்படும் என்றும் அறிவித்தார். 

அதன்படி, தற்போது பயன்பாட்டில் உள்ள திறன் குறைந்த பம்பு செட்டுகளுக்கு பதிலாக உயர் மின்சக்தி திறன் கொண்ட பம்பு செட்டுகள், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். மற்ற பெருவிவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்துடன் வழங்கப்படும். 

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் தெரிவு செய்யப்படும் 32 மின்னூட்டிகள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். முதல்கட்டமாக நடப்பு நிதியாண்டில் ரூ.22 கோடி செலவில் 10 ஆயிரம் பம்பு செட்டுகள் மாற்றி அமைக்கப்படும். 

இந்த திட்டத்தில் பங்கு பெற விரும்பும் சிறு மற்றும் குறு விவசாயிகள் தேவையான சான்றிதழ்களை வருவாய் துறையிடம் இருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும். புதிய உயர்சக்தி மின்சார பம்பு செட்டுகள் மாற்றப்படும்போது 50 சதவீத தொகையை அளிப்பதற்கு பெரிய விவசாயிகளிடம் இருந்து அவர்களது விருப்பத்தைப் பெற வேண்டும். 

பழைய பம்பு செட்டுகள் அனைத்தும் விவசாயிகளிடம் இருந்து திரும்ப பெறப்பட்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பாதுகாப்பில் வைக்கப்படும். இதனை எந்த வகையில் கழிவு செய்வது என்பது குறித்து மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் விரிவான திட்டத்தை வகுத்து அதனை அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். 

புதிய உயர்சக்தி திறன் கொண்ட மோட்டார் மற்றும் பம்பு ஆகிய இரண்டும் சேர்த்து வழங்கப்பட இருப்பதால் இதர உதிரிப்பாகங்கள் வழங்கப்படமாட்டாது. மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், திறந்த விலைப்புள்ளி கோருதல் தொடர்பான சட்டவிதிகள் மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றி பம்பு செட்டுகளை கொள்முதல் செய்ய வேண்டும். 

விவசாயிகளின் கிணற்றில் பம்பு செட்டுகளை நிறுவுதல் உள்பட அனைத்து விவரங்களும் பம்பு செட்டுகள் வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டும். மேற்கண்ட நிபந்தனைகளுடன் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகளின் விருப்பம் உறுதி செய்யப்பட வேண்டும். 

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

thanks to:News india

No comments:

Post a Comment