பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் குட்கா, பான் மசாலா விற்கத் தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை சார்ந்த பொருள்களை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்தத் தடை மார்ச் 1-ம் திகதி முதல் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் 7-ம் திகதி பிறப்பித்த காலக் கெடுவை நீட்டிக்க முடியாது என்று நீதிபதிகள் ஏ.கே. கங்குலி, ஜி.எஸ். சிங்வி ஆகியோரடங்கிய பெஞ்ச் திட்டவட்டமாகத் தெரிவித்தது.
புகையிலை சார்ந்த பொருள்கள் மனித உடலுக்கு மிகவும் கேடு விளைவிப்பவை என்று நிபுணர் குழு அரசிடம் அளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
கடந்த பிப்ரவரி 4-ம் திகதி மத்திய அரசு வெளியிட்ட அரசாணையில், 2009-ம் ஆண்டின் பிளாஸ்டிக் பொருள் நிர்வாகம் மற்றும் அதை அகற்றும் சட்டத்தின்படி குட்கா, பான் மசாலா போன்ற பொருள்கள் பிளாஸ்டிக்கில் பேக் செய்வதை முறைப்படுத்தப் போவதாகவும் அறிவித்திருந்தது.
ஆனால் கடந்த 2-ம் திகதியே நீதிமன்ற பெஞ்ச், பிளாஸ்டிக் உபயோகத்தை முறைப்படுத்தவில்லை என்று மத்திய அரசைக் கடுமையாகக் குறை கூறியிருந்ததோடு, இது தொடர்பாக இரண்டொரு நாளில் அரசாணை வெளியிடுமாறு குறிப்பிட்டிருந்தது.
இதனடிப்படையில் பிப்ரவரி 4-ம் திகதி அரசாணை வெளியானது. இதை செயல்படுத்த ஏன் இத்தனை காலம் ஆனது. இத்தனை காலம் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியத்திடம் நீதிபதிகள் வினவினர். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அரசாணை வெளியிடப்பட்டதாக அவர் பதில் கூறினார்.
சர்வதேச அளவில் வாய் புற்று நோய் உள்ளிட்ட புற்று நோய்க்கு உள்ளானோரில் 86 சதவீதம் பேரிடம் புகையிலைப் பழக்கம் உள்ளது.
இந்தியாவில் இந்த எண்ணிக்கை 90 சதவீதமாக உள்ளதாக நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கோபால் சுப்பிரமணியம் குறிப்பிட்டார். பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை உபயோகிக்க விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து குட்கா, பான்மசாலா தயாரிப்பாளர்கள் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், குட்கா, பான் மசாலா உள்ளிட்டவை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைப்பதற்குத் தடை விதித்தனர்.
இந்த தடை மார்ச் 1-ம் திகதி முதல் அமல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.


நியுஸ் இந்தியா

No comments:

Post a Comment