எகிப்து கலவரம் நீடிப்பதால் பெட்ரோல் விலை மீண்டும் உயரும்

பெட்ரோல் விலையை எண்ணை நிறுவனங்களே சூழ்நிலைக்கு ஏற்ப உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதித்து உள்ளது. இதையடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயரும் போதெல்லாம் பெட்ரோல் விலையை எண்ணை நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.
கடந்த மாதம் 15-ந்தேதி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.2.50 உயர்த்தப்பட்டது. அதற்கு முன்பு டிசம்பர் மாதம் 15-ந்தேதி லிட்டருக்கு ரூ.2.90 உயர்த்தப்பட்டது. அதாவது ஒரு மாத காலத்துக்குள் 2 முறை பெட்ரோல் விலையை உயர்த்தினார்கள். 

இப்போது மீண்டும் பெட்ரோல் விலையை உயர்த்துவது குறித்து எண்ணை நிறு வனங்கள் ஆலோசித்து வருகின்றன. எகிப்து நாட்டில் அரசுக்கு எதிராக நடந்து வரும் கலவரத்தால் அரபு நாடுகளில் இருந்து கச்சா எண்ணைகளை மற்ற நாடு களுக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எகிப்து நாட்டில் தான் புகழ் பெற்ற சூயஸ்கால்வாய் உள்ளது. செங்கடலையும், மத்திய தரைக் கடலையும், இணைக்கும் இந்த கால்வாய் மூலம்தான் ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்க நாடுகளுக்கும் கச்சா எண்ணை அனுப்பப்படுகிறது. 

சூயஸ்கால்வாய் மூலம் தினமும் 18 லட்சம் பேரல் கச்சா எண்ணை அனுப்பப்பட்டு வந்தது. எகிப்து கலவரத்தால் இந்த வழியாக கச்சா எண்ணைகளை அனுப்புவது பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்து விட்டது. 

எகிப்து கலவரத்துக்கு பிறகு மட்டும் 16 சதவீதம் உயர்ந்து உள்ளது. தற்போது ஒரு பேரல் விலை 100 அமெரிக்க டாலரை எட்டி உள்ளது. இதனால் இந்திய எண்ணை நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. பெட்ரோல் மூலம் லிட்டருக்கு 3 ரூபாயும், டீசல் மூலம் லிட்டருக்கு 8 ரூபாயும் இழப்பு ஏற்படுகின்றன. 

எனவே பெட்ரோல் விலையை உயர்த்த எண்ணை நிறுவனங்கள் திட்டமிட்டு உள்ளன. இது பற்றி தீவிர மாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதுபற்றி இந்தியன் ஆயில் நிறுவன சேர்மன் பி.எம்.பன்சாலிடம் கேட்டபோது பெட்ரோல் விலை உயர்வு குறித்து இப்போது என்னால் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்றார். 

கச்சா எண்ணை விலை உயர்வை அடுத்து விமான பெட்ரோலுக்கான விலையை எண்ணை நிறுவனங்கள் உடனடியாக உயர்த்திவிட்டன. ஏற்கனவே இருந்த விலையை விட 4 சதவீதம் உயர்த்தி கிலோ லிட்டருக்கு ரூ.50 ஆயிரத்து 958 என நிர்ணயித்து உள்ளனர்.
நன்றி:நியூஸ் ஒன்

No comments:

Post a Comment