இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் நுழைந்தால் - சிவசேனா தலைவர் பேட்டி!

"உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதிபெறும் பட்சத்தில், மும்பையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் அந்த அணியை விளையாட அனுமதிப்பதா? வேண்டாமா? என்பது பற்றி பால்தாக்கரே முடிவு செய்வார்" என சிவசேனா மூத்த தலைவர் மனோகர் ஜோஷி கூறியுள்ளார். 
14 நாடுகளின் அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடக்கவிழா நேற்று டாக்காவில் தொடங்கியது. இப்போட்டியை இந்தியா, வங்காளதேசம், இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நாளை (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது. இப்போட்டியின் இறுதி ஆட்டம், ஏப்ரல் 2-ந் தேதி மும்பையில் நடைபெற உள்ளது.

ஆனால் இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெறும் பட்சத்தில், அப்போட்டி மும்பையில் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற சந்தேகத்தைச் சிவசேனா கட்சி எழுப்பி உள்ளது.

மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரியும், அந்தக்கட்சியின் மூத்த தலைவருமான மனோகர் ஜோஷி நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், 

"எங்கள் கட்சித்தலைவர் பால்தாக்கரேயின் எண்ணங்கள் பற்றி அனைவருக்கும் தெரியும். உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்குப் பாகிஸ்தான் தகுதி பெற்றால், அவர்களை இங்கு (மும்பை) விளையாட அனுமதிப்பதா, வேண்டாமா? என்பது பற்றி பால்தாக்கரே முடிவு செய்வார்" என தெரிவித்தார்.

பாகிஸ்தானும், இந்தியாவும் வெவ்வேறு பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தான் அணித் தலைவர் அஃப்ரிடி "உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் நாங்கள் இந்தியாவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், இப்போட்டி சிறப்பாக இருக்கும். அத்துடன் சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு உத்வேகம் தந்து, லட்சக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும்" என்று நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். பாகிஸ்தான் அணித்தலைவரின் பேட்டி வெளியான அடுத்தநாளே சிவசேனா தலைவரிடமிருந்து இத்தகைய மிரட்டல் வந்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இன்நேரம்

No comments:

Post a Comment