முருகையன் துப்பாக்கி சூட்டில் இறக்கவில்லை - இந்திய தூதரகம்

லிபியாவில் வேலை பார்த்த தமிழகத்தைச் சேர்ந்த முருகையப்பாண்டியன் துப்பாக்கிச் சூட்டில் இறக்கவில்லை எனவும் வாகன விபத்திலேயே அவர் இறந்தார் எனவும் லிபியாவிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டம், தலைவன் கோட்டையைச் சேர்ந்தவர் முருகைய பாண்டியன். இவர் லிபியாவில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். தற்போது லிபியாவில் நடக்கும் அரசுக்கெதிரான போராட்டத்திற்கிடையில் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

முருகையாவின் மனைவிக்கு லிபியாவில் முருகையாவுடன் வேலைபார்ப்பவர்களிடமிருந்து வந்த தொலைபேசி செய்தியைத் தொடர்ந்து,  அவரது உறவினர்களும், கிராம மக்களும் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு முருகையனின் உடலைத் தமிழகத்திற்குக் கொண்டுவர ஏற்பாடுகளை விரைந்து செய்யும்படி மனுவும் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், முருகையன் துப்பாக்கிச்சூட்டில் இறக்கவில்லை என்றும், ஒரு சாலை விபத்தில்தான் இறந்ததாகவும் திரிபோலியில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளதாக, மத்திய அரசின் வெளிநாட்டு விவகாரத்துறை அமைச்சகத்தின் அதிகாரி கூறியுள்ளார்.

"கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி, 3 இந்தியர்களும் 2 எகிப்தியர்களும் லிபியாவின் வடகிழக்குப் பகுதி வழியாக காரில் எகிப்து நாட்டிற்குச் செல்கையில், எதிரே வந்த வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளனர். படுகாயமடைந்த அனைவரும் தப்ருக் நகரத்தில் உள்ள அல்-வத்னம் மெடிகல் சென்டரில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி முருகைய பாண்டியன் நேற்று உயிர் இழந்தார்." என வெளிநாட்டு விவகாரத்துறை அமைச்சக அதிகாரியின் செய்தி தெரிவிக்கிறது.

இந்நேரம்

No comments:

Post a Comment