கடையநல்லூர் தொழிலாளி லிபியாவில் மர்மச் சாவு

கடையநல்லூர்: கடையநல்லூரைச் சேர்ந்த தொழிலாளி லிபியா நாட்டில் மர்மமான முறையில் இறந்துள்ளார்.

கடையநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டி காலனியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி கோவிந்தம்மாள், மகன் கார்த்திக், மகள்கள் மனிஷா, லலிதா.

கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ஏஜெண்டுகளுக்கு ரூ.80,000 கொடுத்து லிபியாவில் வேலைக்குச் சென்றார் கனகராஜ். ஆனால் அவர் லிபியா சென்ற பின்னர் வீட்டுக்கு பணம் எதுவும் அனுப்பவில்லை. எந்தவித தகவல் தொடர்பும் இல்லை.

இந் நிலையில் கனகராஜ் இறந்துவிட்டதாக திடீரென லிபியாவில் இருந்து தொலைபேசி மூலம் தகவல் வந்தது. அவர் எப்படி இறந்தார் என்ற விவரத்தைக் கூட தெரிவிக்கவில்லை.

அலறித் துடித்த குடும்பத்தினர் அப்பாத்துரை எம்.பியை சந்தித்து கனகராஜ் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

லிபியா நாட்டுக்கு வேலைக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த 25 பேர் அந்த நாட்டில் ஊதியம் தரப்படாமல் சித்ரவதை செய்யப்படுவதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment