பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானிக்கு எதிராக சிபிஐ அப்பீல்


புதுதில்லி, பிப். 18: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மேல்முறையீடு செய்துள்ளது.
 பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக அத்வானி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நீக்கி அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து இப்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
 அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி இடிக்கப்பட்டது. நாடு முழுவதிலும் இருந்து திரண்டு வந்த கரசேவகர்கள் மசூதியை இடித்தனர்.
 சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்து சிறிது தொலைவில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, வினாய் கட்டியார் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் பலர் பேசிக்கொண்டிருந்தனர். இவர்கள் கரசேகவர்களைத் தூண்டிவிடும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில், பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக விசாரித்த சிபிஐ அமைப்பு அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்பட 21 பேர் மீது சதிக் குற்றம் சுமத்தியது.
 மேலும் 2003-ம் ஆண்டு இந்த வழக்கில் சிபிஐ துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அதில் அத்வானி மீது மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது.
 இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் ரேபரேலி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்பட 21 பேர் மீதான குற்றச் சதியில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இல்லை என்று கூறி அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நீக்கியது.
 இதை எதிர்த்து சிபிஐ சார்பில் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கில் சரியான முடிவு எடுக்கவில்லை. அத்வானி உள்ளிட்ட 21 பேர் மீதான குற்றச்சாட்டை நீக்கியதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரியது. ஆனால் இந்த மேல்முறையீட்டு மனுவை அலாகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சிபிஐயின் மேல்முறையிட்டு மனுவை ஏற்க முடியாது.
 அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு சிபிஐ கூறும் காரணம் ஏற்றுக்கொள்வதாக இல்லை. கரசேவகர்களை தூண்டிவிட்டனர் என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி சிபிஐயின் மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி அலோக் குமார் சிங் தள்ளுபடி செய்தார்.
 அலாகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து இப்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது சிபிஐ. இந்த மேல்முறையீட்டு மனு வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
 பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, அத்வானியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி அஞ்சு குப்தா, சாட்சியம் அளிக்கையில், அத்வானிக்கு எதிராக வாக்குமூலம் அளித்தது குறிப்பிடத்தக்கது. கரசேவகர்களைத் தூண்டிவிடும் வகையில் அத்வானி பேசினார் என்று அவர் கூறினார்.
dhinamalar

No comments:

Post a Comment