ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

சென்னை ஆலந்தூர் பகுதியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை புறநகர் பகுதிகளில் திருட்டு, கொள்ளைகளை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் இருக்கவும், நகைகடைகள், வங்கிகள், ஏ.டி.எம். மையங்களை போலீசார் ரோந்து பணியின்போது கண்காணிக்கவும் புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர்.ஜாங்கிட் உத்தரவிட்டு இருந்தார். 

இதையடுத்து சங்கர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி நாராயணன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். பொழிச்சலூரில் உள்ள ஆக்சிஸ் வங்கி ஏ.டி.எம். 

மையத்திற்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் உமாபதி, ஊர்க்காவல் படை போலீசார் ஒருவரும் சென்று பார்வையிட்டனர். அப்போது ஏ.டி.எம். மையத்தில் இருந்த கதவு (ஷட்டர்) பாதி மூடிய நிலையில் இருந்தது. இதனால் சந்தேகம் கொண்ட போலீசார் கீழே குனிந்து பார்த்தபோது ஏ.டிஎம். மையத்தில் 2 பேர் கொள்ளையடிக்க முயற்சி செய்வதைக் கண்டனர். 

உடனே போலீசார் ஏ.டி.எம். கதவை மூட முயன்றனர். இதை பார்த்த கொள்ளையர்கள் கதவை மூட விடாமல் போலீசாரை தள்ளிவிட்டு தப்பி ஓட முயன்றனர். அப்போது சப்- இன்ஸ்பெக்டர் உமாபதி ஒருவரை மடக்கி பிடித்தார். விசாரணையில் திண்டுக்கலை சேர்ந்த விக்னேஷ் (வயது 20) என்பது தெரிய வந்தது. 

இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். விசாரணையில் இவர் போலீசாரிடம், நானும், என் நண்பர்கள் திண்டுக்கலை சேர்ந்த வர்கீஸ் (23), பிரேம்குமார் (24), ஆட்டோ டிரைவர் ஆல்வின்(23) ஆகியோர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயன்றோம் என்பதை ஒப்புக் கொண்டார். 

இதற்கிடையே சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஒரு ஆட்டோ வேகமாகச் சென்றது. உடனே இது பற்றி போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர், புறநகர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். ஆட்டோ பற்றி புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பல்லாவரம் அருகே ஆட்டோ வந்தபோது போலீசார் மடக்கிப் பிடித்தனர். 

அதில் இருந்த பிரேம்குமார், ஆட்டோ டிரைவர் ஆல்வின் ஆகியோரை கைது செய்தனர். இந்த கொள்ளையில் தப்பி ஓடிய வர்கீஸ் என்பவரை போலீசார் தேடினார்கள். இன்ஸ்பெக்டர் லட்சுமி நாராயணன் யோசனையின்பேரில், வர்கீசிடம் விக்னேஷ் செல்போனில் பேசினார். திரிசூலம் ரெயில் நிலையம் அருகே நடந்து செல்வதாக வர்கீஸ் சொன்னார். உடனே போலீசார் விரைந்து சென்று வர்கீசை மடக்கிப் பிடித்தனர். 

கைதான வர்கீஸ் போலீசாரிடம் கூறியதாவது:- 

நான், பிரேம்குமார், விக்னேஷ் ஆகியோர் திண்டுக்கலில் உள்ள பாலிடெக்னிக்கில் டிப்ளமோ கம்ப்யூட்டர் என்ஜினீயருக்குப் படித்தோம். சென்னையில் உள்ள ஆக்சிஸ் வங்கி ஏ.டி.எம். மையத்தை பழுது பார்க்கும் தனியார் நிறுவனத்தில் 4 மாதத்திற்கு முன்பு சேர்ந்தேன். 

இதனால் ஏ.டி.எம். மையத்தில் எங்கு பணம் வைக்கப்பட்டு இருக்கும், அதை எப்படி உடைத்து பணத்தை எடுக்கலாம் என்பது தெரியும். இதனால் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க திட்டமிட்டேன். பொழிச்சலூரில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு வந்தேன். அப்போது அங்கு கேமரா மற்றும் காவலாளி (வாட்ச்மேன்) இல்லாததை கண்டேன். 

மேலும் இந்த ஏ.டி.எம்.மில் ரூ.25 லட்சம் பணத்தை போட்டதை அறிந்து நண்பர்களிடம் தெரிவித்தேன். விக்னேஷ் எனக்கு வெல்டிங் தெரியும் என்றார். இதையடுத்து வெல்டிங் செய்ய பெரிய சிலிண்டர் ஒன்றை வாங்கினோம். ஆட்டோ டிரைவர் ஆல்வினை பொழிச்சலூருக்கு வருமாறு கூறினோம். இதற்கு வாடகையாக ரூ.1,500 பேசினோம். ஏ.டி.எம்.மில் உள்ள பணத்தை கொள்ளையடித்து அதை பங்கு போட்டு சொகுசாக வாழ ஆசைப்பட்டோம். ஆனால் ரோந்து பணியில் இருந்த போலீசார் எங்களை கைது செய்து விட்டனர். 

இவ்வாறு அவர் கூறினார். 

இதையடுத்து கொள்ளையடிக்க முயன்ற கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். ரோந்து பணியால் ரூ.25 லட்சம் கொள்ளை போனதை தடுத்து 3 மணி நேரத்தில் கொள்ளையர்களை பிடித்த தனிப்படையினரை புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ். ஆர். ஜாங்கிட் பாராட்டினார். மேலும் சப்- இன்ஸ்பெக்டர் உமாபதி, ஊர்காவல் படை போலீஸ்காரர் ஆகியோருக்கு வெகுமதி வழங்கினார்.

New India News

No comments:

Post a Comment