எகிப்திலிருந்து முதல் மீட்பு விமானம் மும்பை வந்தடைந்தது


எகிப்து அதிபருக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து அந்நாட்டில் உள்ள இந்தியர்களை பாதுகாப்ப மீட்க அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து 300 இந்தியர்களுடன் முதல் மீட்பு விமானம் திங்கள் கிழமை காலை மும்பை வந்தடைந்தது.

எகிப்தின் அதிபராக 30 ஆண்டுகளாக ஹோஸ்னி முபாரக் என்பவர் இருந்து வருகிறார். அண்மையில் துனீசியாவில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து, எகிப்திலும் அதிபர் பதவி விலக வேண்டும் என புரட்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் வன்முறையில் ஈடுபடுகின்றனர். வணிக நிறுவனங்களும் சூறையாடப்பட்டு வருகின்றன. நிலைமை மோசமாகி வருவதால் எகிப்தில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வர அரசு உத்தரவிட்டது.

எகிப்தில் மொத்தம் சுமார் 3600 இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களில் 2200 பேர் தலைநகர் கெய்ரோவில் வசிக்கின்றனர். இதுவரை இந்தியர்கள் பாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை. என்றாலும் முதற்கட்டமாக 300 இந்தியர்கள் பாதுகாப்பாக இந்தியா கொண்டு வரப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆவர்.

டாடா நிறுவன ஊழியர்கள் சுமார் 300 பேர் இந்தியா வரத் தயாராக கெய்ரோ விமான நிலையத்தில் இருப்பதாகவும் அவர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பதட்டம் நீடிக்கும் பட்சத்தில் மேலும் விமானங்களை அனுப்பி இந்தியர்கள் முழுமையாகத் திரும்ப அழைக்கப்படுவார்கள் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment