சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் இலேசான நில அதிர்வு !

சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் லேசான பூமி அதிர்ச்சி ஏற்பட்டதால் வீடுகள் குலுங்கின. வீட்டிலிருந்த பாத்திரங்கள் உருண்டதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி வீதிக்கு ஓடி வந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் அச்சம் நிலவுகின்றது.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வேப்பநத்தம் கிராமத்தின் பொன்னொளி நகரில் காலை சுமார் 6.15 மணிக்கு திடீரென பலமான சப்தமும் லேசானா நில அதிர்வும் ஏற்பட்டது. அது சமயம் வீட்டினுள் இருந்த நாய், பூனை உள்ளிட்ட பிராணிகள் வெளியே ஓடிச்சென்று மிரட்சியுடன் காணப்பட்டன. இந்த அதிர்வை உணர்ந்த கிராம மக்கள் அதிர்ச்சியுடன் வீட்டிலிருந்தவர்களை வெளியேற்றிக் கொண்டு வீதியில் திரண்டனர்.
அப்போது சிலர் பூமி அதிர்வை தாங்கள் உணர்ந்ததாகக் கூறினர். இதேபோன்று வேப்பநத்தம் அருகில் அமைந்துள்ள ஊனத்தூர், சிறுவாச்சூர், அண்ணாநகர், கல்லாநத்தம், அன்புநகர் ஆகிய கிராமங்களிலும் பூமி அதிர்ச்சியை உணர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
அதே போன்று விழுப்புரம் மற்றும் சேலம் மாவட்டத்தின் எல்லையாக அமைந்துள்ள கல்வராயன்மலையைச் சுற்றியுள்ள சுமார் 25க்கும் மேற்பட்ட மலை கிராமங்களிலும் நேற்று காலை சுமார் 6.20 மணியளவில்  இடி சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது. ஒரு சில வினாடிகள் நீடித்த இந்த அதிர்வால் வீடுகள் லேசாக குலுங்கியதுடன் வீட்டின் மேற்கூரை, வீட்டிலிருந்த பொருட்கள் உருண்டு விழுந்தன. சுண்டகப்பாடியில் ஒரு கூரை வீட்டின் சுவரிலும், கொடுந்துறை கிராமத்தில் உள்ள நூலக கட்டிடத்தின் சுவரிலும் லேசான விரிசல் ஏற்பட்டது. நில அதிர்வை உணர்ந்த மலைவாழ் மக்கள், குழந்தைகளையும், உடமைகளையும் தூக்கிக்கொண்டு அலறி அடித்து வீட்டை விட்டு வெளியேறினர்.
இதற்குள் நில நடுக்கம் பீதி கிராமங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. பீதி அடங்கிய பிறகே கிராம மக்கள் வீட்டுக்குள் சென்றனர்.
இதுகுறித்து பேசிய சேலம் வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள், தென் கிழக்கு ஈரான் நாட்டில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் பகல் 2 மணி அளவில் நில நடுக்கம் ஏற்பட்டதாகவும், இந்த நிலநடுக்கம் 6.0 ரிக்டர் அளவாக இங்குள்ள சீஸ்மோகிராப் கருவியில் பதிவாகியுள்ளதாகவும், சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாக கருவியில் பதிவாகவில்லை என்றும் கூறினர்.
thanks to:http://www.inneram.com/2011012913230/mild-earthquake-in-salem-villupuram-districts

No comments:

Post a Comment