6000 முஸ்லிம்கள் யாழ் திரும்பினர்

யாழ் பெரிய பள்ளிவாசல்(பழைய படம்)இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்திற்கு சுமார் ஆறாயிரம் முஸ்லிம்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.
இவ்வாறு வந்துள்ளவர்கள் யாழ் நகரம், சாவகச்சேரி, மற்றும் வேலணை ஆகிய பகுதிகளில் மீள்குடியமர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
கடந்த 1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளினால் யாழ்ப்பாணம் மற்றும் வட பகுதி மாவட்டங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் மதவாச்சி, அனுராதபுரம், புத்தளம் போன்ற பல்வேறு இடங்களில் தஞ்சமடைந்திருந்தார்கள்.
விடுதலைப்புலிகளுடனான யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இந்த முஸ்லிம் மக்கள் படிப்படியாகத் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறு திரும்புபவர்கள் அவர்களது சொந்தக் காணிகளிலும் பொது இடங்களிலும் இப்போது தங்கியிருக்கின்றார்கள்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கென விசேட வேலைத்திட்டங்கள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்த மக்கள் சார்பில் பலரும் குரல் கொடுத்து வந்துள்ளார்கள்.
எனினும் போரினாலும், இராணுவ உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்தும் இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு வழங்கப்படுகின்ற உதவிகளைப் போன்றே முஸ்லிம் மக்களுக்கும் வழங்கப்படும் என்றும் அதற்கான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் கூறுகின்றார்.
இரண்டாயிரத்துக்கும் குறைவான முஸ்லிம் குடும்பங்களே இதுவரையில் யாழ்ப்பாணதிற்குத் திரும்பியிருப்பதாகவும், இன்னும் நாலாயிரம் ஐயாயிரம் குடும்பங்கள் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பி வரவுள்ளதாகவும் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களின் நலன்களுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

thanks to:http://www.bbc.co.uk/tamil/news/story/2011/01/110118_jaffnamuslims_settlement.shtml

No comments:

Post a Comment