ஐபியைக் கலைக்க வேண்டும் : தமிழர் இறையாண்மை மாநாடு தீர்மானம்!


தேசியப் புலனாய்வு நிறுவனமான ஐபியைக் கலைக்க வேண்டும் என்று தமிழர் இறையாண்மை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செங்கல்பட்டு அருகே உள்ள மறைமலை நகரில்  சனிக்கிழமையன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் தமிழர் இறையாண்மை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தமிழக மீனவர்கள் பாதுகாப்பு மற்றும் கட்சத் தீவு மீட்பு

தமிழக மீனவர்கள் மீது இலங்கை இராணுவத்தாலும், இந்திய கடலோரப் பாதுகாப்புப் படையினராலும் 'கடல் எல்லைப் பாதுகாப்பு' எனும் பெயரில் தாக்குதல்களும் ஒடுக்குமுறைகளும் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. கடல் வளத்தில் மீனவர்களுக்குள்ள இயற்கையான உரிமைகளைப் பறிக்கும் வகையில் இந்தியக் கூட்டரசின் கடல்சார் சட்டங்கள் உள்ளன. இச்சட்டங்கள் உடனடியாகத் திரும்பப் பெறப்படல்வேண்டும்.

மேலும், சர்வதேசக் கடல் பரப்பில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமையை நிலைநாட்டும் வகையில் சிறப்புச் சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும். தென்தமிழக மீனவர்களுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கும் இலங்கை அரசு மீது இந்தியக் கூட்டரசு பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும். கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்த இந்திய - இலங்கை ஒப்பந்தம், தமிழக மீனவர்களின் பாதுகாப்பையும் - இந்தியக் கூட்டரசின் எல்லைப் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ரத்து செய்யப்பட்டு, கச்சத்தீவை தமிழக எல்லைக்கு மீட்டுத்தர வேண்டுமென இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

இந்தியாவில் உள்ள தேசிய இனங்களுக்கு அங்கீகாரம்

இந்தியா என்பது ஆங்கிலேயர்களின் சுரண்டலுக்கு வசதியாக ஒருங்கிணைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட ஒரு நிர்வாகக் கட்டமைப்பேயாகும். வெள்ளையனால் உருவாக்கப்பட்ட இன்றைய இந்தியாவில், தேசிய இன உணர்வுகள் மேலோங்கி வருகின்றன. அதன் அடையாளமாகவே இங்கு மொழிவழி மாநிலங்கள் 1956 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டன.

அதாவது, தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் கூர்மையடைந்து வருவதால், இவ்வாறு மொழிவழி மாநிலப் பிரிவினைகள் தோன்றின. ஒவ்வொரு தேசிய இனத்திற்குமான மொழி, இன உரிமைகளும், மண்ணுரிமை, கனிமவள உரிமை, ஆற்றுநீர் உரிமை போன்ற பிற உரிமைகளும் இங்கே இன்னும் கேள்விக்குறிகளாகவே இருக்கின்றன. இவ்வாறான நிலையில், தேசிய இனங்களுக்குரிய அனைத்து உரிமைகளையும் அதிகாரங்களையும் பகிர்ந்தளிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து, ஒவ்வொரு தேசிய இனமும் இறையாண்மையுள்ள தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

அதனடிப்படையில் முழு அதிகாரம் பெற்ற மாநில அரசுகளைக்கொண்ட கூட்டரசாக இந்திய அரசு அமைந்திட மத்தியில் கூட்டாட்சி முறையைக் கொண்டு வர வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின் இம்மாநாடு முன் மொழிகிறது.

மாநிலங்களுக்குத் தன்னாட்சி அதிகாரம்

மத்திய - மாநிலப் பொதுப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தவிர ஏனையவை குறித்து சட்டமியற்றும் அதிகாரத்தை மத்திய அரசுக்கே அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது.


இந்த அதிகாரத்தை மாநில அரசின் வரம்புக்குள் கொண்டு வரவேண்டும். குறிப்பாக, இத்தகைய இனங்களின் மீது வரிவிதிப்பு அதிகாரத்தை மாநில அரசிடம் வழங்க அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் எனவும் மாநாடு வலியுறுத்துகிறது. தற்போது திரட்டப்படும்  மத்திய வரிகளிலும் கூடுதல் வரிகளிலும் மாநிலங்களுக்கு எழுபத்தைந்து விழுக்காடு வழங்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.


மாநிலங்களின் அரசுக் கொடி

ஆகஸ்டு -15 இந்திய விடுதலை நாள் மற்றும் சனவரி 26 இந்தியக் குடியரசு நாளில் இந்திய தேசியக் கொடியுடன் மாநிலத்தின் கொடியை தலைமைச் செயலகம் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஏற்றி வைத்திட வேண்டுமெனவும் இம்மாநாடு இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

கனிம வளங்கள் மீது மாநிலங்களுக்கு உரிமை

ஒவ்வொரு மாநில எல்லைகளுக்கும் உள்ள கனிம வளங்கள் மீதுள்ள உரிமை அந்தந்த மாநிலங்களுக்கே உரிய உயிராதார உரிமையாகும். இத்தகைய கனிம வளங்கள் மீது மாநிலங்கள் பயன்பெற வேண்டுமெனில், இந்தியக் கூட்டரசு ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டின் அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், அதற்கான வருவாயை மாநில அரசுகளே பயன்படுத்திக்கொள்ளவும் வகை செய்யப்பட வேண்டும்.

இதற்கு ஏதுவாக இந்தியக் கூட்டரசு கனிம வளங்களின் மீது செலுத்தும் மேலாண்மையை விலக்கிக்கொள்ளும் பொருட்டு, கனிம வளங்கள் மேலாண்மையை மாநில அரசுகளின் அதிகாரப் பட்டியலுக்கு மாற்றி அறிவிக்க வேண்டுமென இந்திய அரசை இம்மாநாடு வலியுத்துகிறது.

மருத்துவம், உயர்கல்வி மற்றும் உயராய்வுக்கல்வி

மத்தியில் ஆளும் காங்கிரசு தலைமையிலான கூட்டணி அரசு மாநிலங்களின் உணர்வை மதிக்காமல் உயர்கல்வி மற்றும் மருத்துவக்கல்வி தொடர்பான அதிகாரங்களை மத்தியில் குவித்துக்கொள்ளும் நோக்கோடு உருவாக்கியிருக்கும் மருத்துவம், உயர்கல்வி மற்றும் உயராய்வுக்கல்வி தொடர்பான அமைப்புகளைக் கலைத்திட வேண்டும் என  இம்மாநாடு வலியுத்துகிறது.

தேசிய புத்தக ஆதரவுக் கொள்கை


நூல்களின் அச்சு, விநியோகம் உள்ளிட்டவற்றை மேலாண்மை செய்யும் வகையில் தற்போது மத்திய அரசு உருவாக்கியிருக்கும் தேசிய புத்தக ஆதரவுக்கொள்கை மாநில உரிமைகளைப் பறிக்கும் நிலையில் இருப்பதால் அதைக் கைவிட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது. அதற்குப் பதிலாக அந்தக் கொள்கையை மாநில அரசே உருவாக்க வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தேசிய புலனாய்வு நிறுவனம் கலைக்கப்பட வேண்டும்

தேசிய புலனாய்வு நிறுவனம் என்ற அமைப்பு மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் மாநில காவல்துறை தொடர்பான உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. எனவே, இந்த அமைப்பைக் கலைத்திட வேண்டுமென இந்திய அரசை இம்மாநாடு வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

வெளியுறவுக் கொள்கை முடிவுகளில் மாநிலங்களின் நலன்

மத்திய அரசு வெளியுறவுக் கொள்கை தொடர்பான முடிவுகளை எடுக்கும் போதும் அண்டை நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளும் போதும் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்ள தேசிய இனங்களின் உரிமைகள் தொடர்புடையவையாக இருந்தால் அந்த தேசிய இனத்தைச் சார்ந்த மக்களின் கருத்துகளைக் கேட்ட பிறகே முடிவை எடுக்க வேண்டும். இதற்கு மாநில அரசு மட்டுமின்றி அங்கீகாரம் பெற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் இடம்பெறக்கூடிய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment