இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு கீ.வீரமணி கண்டனம்


ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நேற்று முன்தினம் விண்ணில் பறந்திருக்கவேண்டிய ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஜி சாட் 5 பிரைம் என்ற செயற்கைக்கோள் ஏவும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டுவிட்டது. ‘கிரையோஜெனீக்’ என்ஜினில் ஏற்பட்ட கோளாறா ராக்கெட்டின் வால் பகுதியில் ஏற்பட்ட கசிவு காரணமாக, வானில் செலுத்துவது தாமதமானது.

இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சிக் கழக தலைவர் ராதாகிருஷ்ணன் என்ற கேரளத்தைச் சார்ந்த விஞ்ஞானி, இந்த விண்வெளிக்குப் புறப்படும் ராக்கெட் நல்லபடியாகப் புறப்பட, ஆந்திர மாநிலம் காளஹஸ்தி கோவிலில் சிறப்பு பூசை செய்துவிட்டு வந்துள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது. விண்வெளி ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானி, காளஹஸ்தி கோவிலில் உள்ள கடவுளை வேண்டினார் என்பது எவ்வளவு அறியாமை! மடமை! மூட நம்பிக்கை! அறிவியலுக்கு நேர்மாறானது!

சமீபத்தில் கோபுரம் இடிந்து விழுந்து காளஹஸ்தி கோயிலே சில மாதங்களுக்குமுன் தரைமட்டமான பிறகும்கூட இவர்களுக்குப் புத்தி வரவில்லையே! தன்னைக் காக்கத் தெரியாத முடியாத கடவுளா உன்னைக் காப்பாற்றுவான்? என்று தந்தை பெரியார் கேட்பார்; அதுதான் நினைவுக்கு வருகிறது! கோவிலில் சிறப்பு பூசை செய்த பின்னரும் கிளம்பவில்லையே! இதுதான் காளஹஸ்தியின் சக்தி!

அறிவியல், மதச் சார்பின்மை  மனப்பான்மை எல்லாம் இத்தகையவர்களால் குழிதோண்டிப் புதைக்கப்படுகிறதே இது நியாயமா? ஏற்கெனவே, இவரின்
முன்னோடி,ஆராய்ச்சி செய்து கண்டறிந்த ராக்கெட்டை அனுப்பும் முன்பு திருப்பதி ஏழுமலையானை வேண்டுவது, குருவாயூருக்குச் சென்று, குருவாயூர்
கிருஷ்ணனை வேண்டுவது போன்ற கேலிக் கூத்தான செயல்களைச் செய்து வந்திருக்கின்றனர்! கடைசியில் பலனின்றித் தோல்வியில் முடிந்ததும் உண்டு.

நாடு முழுவதும் உள்ள அறிவியல் அறிஞர்கள், மதச்சார்பின்மை தத்துவங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர்கள் இதனைக்கண்டித்துத் தீர்மானம் போட்டு
அவர்களுக்கும், மத்திய அரசுக்கும் அனுப்ப வேண்டும். விஞ்ஞானிக்குப் பக்தியிருந்தால் அது அவரது வீட்டுக்குள்தான் இருக்கவேண்டும். விண்வெளிக் கூடத்திற்கு வரவழைக்கப்படலாமா?

இத்தகைய மெத்தப் படித்த மேதாவிகளின் கேலிக் கூத்துக்குமுன்,  ஜோதிடரின் பேச்சைக்கேட்டு ஒன்றரை வயதுக் குழந்தையைக் கிணற்றில் வீசிக் கொன்ற ஆனைமலை காளீஸ்வரிகளின் மூடநம்பிக்கை’ வெகுசாதாரண, ‘சின்ன கோடாக’ மாறிவிடுகிறதே! என்று தனது அறிக்கையில் கி.வீரமணி கூறியுள்ளார்.
 
thanks to:http://www.inneram.com/

No comments:

Post a Comment