அடுத்த பத்தாண்டுகளுக்கு பாஜக ஆட்சி அமைக்க முடியாது: சிதம்பரம்!


அடுத்த பத்து ஆண்டுகள் மட்டுமல்ல. அதற்கு மேலாக பாரதீய ஜனதா கட்சியால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

டில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் இரண்டு நாள் மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அடுத்த பத்து ஆண்டுகளுக்கு காங்கிரஸ் ஆட்சி தனியாகவோ அல்லது காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிதான் நடைபெறும் என்று சிதம்பரம் கூறினார்.

பாரதீய ஜனதா கட்சிக்கு நான் ஒன்றைக் கூறிக் கொள்கிறேன். " அடுத்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அல்லது அதற்குப் பிறகும் கூட (ஆப் கா நம்பர் நஹி ஆயகா) உங்களுடைய எண்ணிக்கை உங்களுக்கு கிடைக்காது. அடுத்த பத்து ஆண்டுகளுக்கு நாங்கள்தான் ஆட்சியில் இருப்போம்" என்றும் சிதம்பரம் கூறினார்.

காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சியாக உள்ளது. எனவே அது நன்கு திட்டமிட்டு செயல்பட வேண்டியதுஅவசியம். உள்ளடங்கிய வளர்ச்சிக்கு காங்கிரஸ் அதிக கவனம் செலுத்த வேண்டும். அனைவருக்கும் நல்ல சுகாதார வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைவருக்கும் கல்வி கிடைக்க வகை செய்ய வேண்டும். ஒவ்வொரு குடிமகனும், சிறந்த வாழ்க்கையைப் பெற உதவ வேண்டும் என்றும் அவர் கூறினார்.

காங்கிரஸ் கட்சி மீது ஏன் பாஜக இப்படி காட்டமாகவே இருக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. ஒருவேளை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கட்சியாகவும் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் கட்சியாகவும் காங்கிரஸ் இருப்பதால் அவர்களுக்கு கோபம் வரலாம் என்று கருதுகிறேன் என்றும் சிதம்பரம் கூறினார்.

நாட்டை முழுமையாக ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சி புரியக் கூடிய தகுதி படைத்த ஒரே கட்சி காங்கிரஸ் கட்சி மட்டுமே. பாஜகவுக்கு மக்கள் வாய்ப்பளித்தார்கள். ஆனால் அது தோல்வி அடைந்து விட்டது. இதனால்தான் காங்கிரஸைப் பார்த்து பாஜக பொறாமைப்படுகிறது. எப்படி ஆட்சி புரிய வேண்டும் என்பதும் எப்படி மீண்டும் ஆட்சிக்கு வருவது என்பதும் காங்கிரஸுக்கு மட்டும்தான் தெரியும் என்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
thanks to ; http://www.inneram.com/

No comments:

Post a Comment