மஸ்கட் தீவிபத்து - நான்கு தமிழர்கள் பலி


வளைகுடா நாடான ஒமான் தலைநகரான மஸ்கட்டில்  நடைபெற்ற தீவிபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் 4 பேர் தமிழகத்தைச் சார்ந்தவர்கள். பிஸியா என்ற இடத்தில் உள்ள தொழிலாளர் தங்குமிடத்தில் இந்த விபத்து 17ம்திகதி அதிகாலை நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வு விபத்துதான் என்றும் இதில் சதிவேலைகள் ஏதுமில்லை என ராயல் ஒமான் காவல்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக வந்த சில அதிகாரபூர்வமற்ற செய்திகள் இதில் சதி இருப்பதாக தெரிவித்திருந்தன.
இந்த தீவிபத்தில் இறந்தவர்கள் வருமாறு

ஜானி (45) - தமிழ்நாடு
பாலச்சந்திரன் (45) - தமிழ்நாடு
சுப்ரமணியன் (30) - தமிழ்நாடு
மணிகண்டன் (32)- தமிழ்நாடு
அனீஸ் (26) - கேரளா
மணிகண்டன் நெல்லை மாவட்டம் புளியங்குடியைச் சார்ந்தவர். பெயிண்டர் வேலை செய்து வந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மஸ்கட் வந்துள்ளார். இவருக்கு 2 வயதில் ஒரு மகள் இருக்கிறது. சுப்ரமணியன்,பாலச்சந்திரன் மற்றும் ஜானி ஆகியோர் கன்னியாகுமரியைச் சார்ந்தவர்கள்.
அனீஸின் உறவினர் ஒருவர் கூறும்போது அனீஸ் கடன் வாங்கி முகவர்களுக்கு அதிகளவு பணம் கொடுத்து ஒன்றரை வருடங்களுக்கு முன்புதான் வந்தார். அவருடைய குடும்பத்தில் அவர் ஒருவர்தான் வருமானம் ஈட்டக் கூடியவர். அவர் இறந்த விபரத்தை இன்னும் குடும்பத்துக்கு தெரிவிக்கவில்லை. மருத்துவமனையில் இருப்பதாகத்தான் சொல்லி இருக்கிறோம் என கண்ணீர் மல்க கூறினார்.
3 அறைகளுள்ள ஒரு வீட்டில் 15 பேர் தங்கியுள்ளனர். ஒரு அறையில் தீபிடித்து அந்த அறையில் தங்கியிருந்த ஐவரும் உயிரிழந்துள்ளனர். நண்பர்கள் தீயை அணைக்க எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. தீ அணைப்புத்துறையினர் வந்து தீயை அணைத்துள்ளனர். தீவிபத்து நடைபெற்ற அன்று அந்த தொழிலாளர் முகாமில் மின்சாரம் இல்லை எனவும் அதனால் அங்கிருந்தோர் பெட்ரோமாக்ஸ் விளக்குகளை பயன்படுத்தினர் என தொழிலாளி கூறியுள்ளார். இந்த விளக்கின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். 
http://www.inneram.com/

No comments:

Post a Comment