7.4 ரிக்டர் ஆக பதிவு: ஜப்பானில் பயங்கர பூகம்பம் சுனாமி எச்சரிக்கையால் பீதி

டோக்கியோ, டிச.22-
ஜப்பானின் பசிபிக் கடலில் “ஜைன் தீவு” உள்ளது. இங்கு இன்று அதிகாலை 2.19 மணியளவில் (இந்திய நேரப்படி நேற்று மாலை 5.19 மணி) பயங்கர பூகம்பம் ஏற்பட்டது.இதனால் பலத்த சத்தத்துடன் பூமி குலுங்கியது. கட்டிலில் படுத்து தூங்கியவர்கள் கீழே விழுந்தனர். இதையடுத்து அலறியடித்தபடி மக்கள் எழுந்தனர்.
பூமி குலுங்கியதை பார்த்ததும் பூகம்பம் என அறிந்த மக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர்.
இதற்கிடையே கடலில் சுமார் 2 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பின. சுனாமி எச்சரிக்கை மையம் மூலம் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
இதற்கிடையே இங்கு 7.4 ரிக்டர் அளவில் பூகம்பம் தாக்கியதாக அறிவிக்கப்பட்டது. டோக்கியோவில் இருந்து 1000 கி.மீட்டர் தூரத்தில் உள்ள ஒகாசவாரா தீவுகளின் அருகே பூகம்பம் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் பூகம்பம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் மற்றும் காயங்கள் போன்றவை வெளியிடப்படவில்லை. முன்னதாக பூகம்பம் ஏற்பட்ட “ஜைன்” தீவுகள் அருகேயுள்ள சிசி-ஷிமா தீவில் இருந்த 200-க்கும் மேற்பட்டவர்களும், ஹஹா-ஷிமா தீவில் இருந்து சுமார் 100 பேரும் வெளியேற்றப்பட்டனர்.
இதற்கிடையே, பூகம்பம் தாக்கிய 5 மணி நேரம் கழித்து அலைகளின் சீற்றம் குறைந்தது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ரத்து செய்யப்பட்டது.
உலகில் உள்ள பூகம்ப எச்சரிக்கை மையங்களில் ஜப்பானும் ஒன்று. பசிபிக் பிராந்தியத்தில் ஏற்படும் 20 சதவீத பூகம்பங்கள் இங்கு நடைபெறுகிறது. எனவே இங்கு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த 1995-ம் ஆண்டு கோப் நகரில் 7.2 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. அதில் 6,400 பேர் பலியானார்கள்.

thanks to:http://www.maalaimalar.com/2010/12/22144816/japan-earthquake.html

No comments:

Post a Comment