ஜனவரி 10ஆம் தேதி உள்ளாட்சி இடைத்தேர்தல்; இன்று முதல் வேட்பு மனுதாக்கல்!

உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 523 பதவியிடங்களுக்கு ஜனவரி 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் சையது முனீர் ஹோதா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

உள்ளாட்சிகளில் 31-10-2010 வரை ஏற்பட்ட காலியிடங்களுக்கு அடுத்த மாதம் (ஜனவரி) 10ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிக்கை இன்று (புதன்கிழமை) வெளியிடப்படுகிறது. இன்றே வேட்பு மனுத்தாக்கலும் தொடங்குகிறது. 29ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம். மறுநாள் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். ஜனவரி 3ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம்.

ஜனவரி 10ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இடைத்தேர்தல் நடைபெறும். ஓட்டு எண்ணிக்கை 12ஆம் தேதி நடைபெறும். தேர்தல் நடைமுறைகள் 13ஆம் தேதி முடிவடையும்.

இந்த தேர்தலில், காலியாக உள்ள 471 கிராம உள்ளாட்சி பதவியிடங்கள், 52 நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்கள் ஆக மொத்தம் 523 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இவற்றில் கட்சி அடிப்படையில் 78 பதவியிடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.

சென்னை மாநகராட்சி வார்டு எண்: 93, ஈரோடு மாநகராட்சி வார்டு எண்: 5, மதுரை மாநகராட்சி வார்டு எண்: 45, காஞ்சீபுரம் நகராட்சி வார்டு எண்: 10, நாகர்கோவில் நகராட்சி வார்டு எண்: 50, கரூர் நகராட்சி வார்டு எண்: 19, திருவாரூர் நகராட்சி வார்டு எண்: 23, ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி வார்டு எண்: 10 மற்றும் 26 ஆகிய இடங்களுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.

இதுபோல காலியாக உள்ள மூன்றாம் நிலை நகராட்சி வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கும் தேர்தல் நடக்கிறது. 376 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், 69 ஊராட்சித்தலைவர் பதவியிடங்கள் ஆக மொத்தம் 445 பதவியிடங்களுக்கு கட்சி அடிப்படை இல்லாமல் தேர்தல் நடைபெறும்.

இந்த தேர்தலுக்காக கிராமப்புற உள்ளாட்சிகளில் 997 வாக்குச்சாவடிகளும், நகர்ப்புற உள்ளாட்சிகளில் 85 வாக்குச்சாவடிகளும் ஆக மொத்தம் 1,082 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

உள்ளாட்சி அமைப்புகளில் சட்டம் மற்றும் தேர்தல் விதிமுறைகளின்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தேர்தல் செலவுக் கணக்குகளை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யாதவர்களிடம் இருந்து உரிய விளக்கம் கோரப்பட்டு வாய்ப்புகள் தரப்படும். அதன்பிறகும் செலவு கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


thanks to:http://www.inneram.com/

No comments:

Post a Comment