பெண்ணுக்கு திருமண வயது 16 ஈரான் அதிபர் அதிரடி அறிவிப்பு

டெஹ்ரான்: ஈரானில் கடந்த 1979ம் ஆண்டு பிறப்பு விகிதம் வரலாறு காணாத வகையில் அதிகரித்தது. மக்கள் தொகை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததால், 90ம் ஆண்டுகளில் அங்கு முதல்முறையாக குடும்ப கட்டுப்பாடு திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதை சர்வதேச நாடுகள் பாராட்டின. கடந்த 2005ம் ஆண்டு அதிபர் ஆன அகமதினாஜெத்துக்கு மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது பிடிக்கவில்லை.

‘இது கடவுளின் விதிக்கு எதிரானது, மேற்கத்திய கலாசாரம்’ என விமர்சித்து வந்தார்.  ஈரானின் மக்கள் தொகை தற்போது 7 கோடியே 50 லட்சமாக உள்ளது. இதை அதிகரிக்க விரும்புகிறார் அகமதினாஜெத்.  குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை திட்டத்தை கடந்த ஜூலை மாதம் அமல்படுத்தினார். 15 கோடி பேருக்கு உணவளிக்கும் சக்தி ஈரானுக்கு உள்ளது என அவர் பிரசாரம் செய்து வருகிறார்.

ஈரானில் வெளியாகும் ஜாம்&இ&ஜாம் என்ற பத்திரிக்கைக்கு நேற்று பேட்டி அளித்த அகமதினாஜெத், "திருமண வயது தற்போது ஆண்களுக்கு 26, பெண்களுக்கு 24 என உள்ளது. இதில் எந்த அர்த்தமும் இல்லை. ஆண்கள் 20 வயதிலும், பெண்கள் 16 அல்லது 17 வயதிலும் திருமணம் செய்து கொள்ளலாம் என நாம் மாற்ற வேண்டும்" என்றார்.

அதிபரின் இந்த கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஈரானில் வேலையில்லா திண்டாட்டம் தற்போது 9 சதவீதமாக உள்ளது. அகமதினாஜெத்தின் கொள்கையால், நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் அதிகரிக்கும் என விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

நன்றி:http://www.dinakaran.com/highdetail.aspx?id=20984&id1=13